சட்ட விரோதமாக மணல் அள்ளியதாக வழக்கு: குவாரி உரிமையாளருக்கு ரூ.2 கோடி அபராதம், சிவகங்கை கலெக்டர் தகவல்
சட்ட விரோதமாக மணல் அள்ளிய குவாரி உரிமையாளருக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக சிவகங்கை கலெக்டர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மதுரை,
சிவகங்கை மாவட்டம், குமாரக்குறிச்சியை சேர்ந்த கார்த்திகைராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
காரைக்குடி நகர பாதாள சாக்கடை திட்டத்துக்காக, இளையான்குடியை அடுத்த முத்தூர் கிராமத்தில் அனுமதி பெற்று குவாரி அமைத்து மணல் அள்ளப்படுகிறது.
ஆனால் அனுமதி பெறப்படாத கட்டனூர், தென்கடுகை பகுதி பட்டா நிலங்களிலும் சட்டவிரோதமாக மணல் அள்ளுகிறார்கள். இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே இளையான்குடியை அடுத்த முத்தூர் பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகங்கை மாவட்ட கலெக்டர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘முத்தூர் கிராம மணல் குவாரியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு ரூ.1 கோடியே 97 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது‘ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.