டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த ஆயந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து காரணை பெரிச்சானூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் அண்ணாமலை நகரின் அருகில் அரசு டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தியும் வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஆயந்தூர் கிராம மக்கள் திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அழைத்துச்சென்றனர்.
அப்போது அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தற்போது டாஸ்மாக் கடை திறக்க உள்ள இடத்தின் வழியாகத்தான் ஆயந்தூர், காரணைபெரிச்சானூர், புரவடை, சித்தேரிப்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் தினமும் அத்தியாவசிய தேவைக்காக சென்று வருகின்றனர். மாணவ- மாணவிகளும், இவ்வழியாகத்தான் பள்ளி- கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.
இப்படியிருக்க இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் மது குடிக்க வருபவர்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடிப்பிரியர்களின் அட்டகாசத்தினால் பெண்கள், மாணவிகள் தனியாக சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே ஆயந்தூரில் டாஸ்மாக் கடை திறக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story