10–ம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தை ஆண்ட அரசரின் போர் வாள்கள் கண்டெடுப்பு
10–ம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தை ஆண்ட அரசரின் போர் வாள்கள் கண்டெடுக்கப்பட்டன.
காரமடை,
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெள்ளாதி என்ற இடத்தில் பழமையான அழகு மாதவப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் தர்மராசா திரவுபதியம்மன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் தமிழ்மறவான் ரமேஸ் என்பவர் இந்த கோவில் அருகே ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டிருந்தனர். கோவில் அருகே புளியமரத்தடியில் பந்தல் அமைப்பதற்கு குழி தோண்டியபோது மண்மூடிய நிலையில் நாகர் சிலை மற்றும் ஒரு அடி நீளமுள்ள சிறிய வேல் ஒன்று காணப்பட்டது.
பக்தர்களுடன் அவற்றை வெளியில் எடுக்க முயற்சித்த போது மண்ணுக்கு அடியில் இருந்து 4 போர்வாள்கள் கிடைத்தன. பின்னர் அவை சுத்தம் செய்யப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டன. போர் வாள்கள் குறித்து ஆய்வாளர் ஆய்வு செய்ததில் அவை 10 முதல் 12–ம் நூற்றாண்டுகளில் ஹொய்சாலா பேரரசில் பயன்படுத்திய போர்க்கருவிகள் என்று தெரியவந்தது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் தமிழ்மறவான் ரமேஸ் கூறியதாவது:–
கண்டெடுக்கப்பட்ட போர்வாள்கள் நேராகவும், வளைவாகவும் உள்ளன. வெட்டுவாளின் அலகு ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலுமோ கூரிய விளிம்புகளுடன் வளைந்தும் இருக்கிறது. 2 அடியில் உள்ள வாளின் அலகு, அதன் விளிம்புகள் வெட்டுவதற்கும், அலகின் கூர்முனை குத்துவதற்கும் ஏற்றவகையிலும் இருக்கிறது.
வாள்கள் இருவகை பயன்பாட்டுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவை போரின் அடிப்படை நோக்கமும், அதன் வடிவமும் பல நூற்றாண்டுகளாகவே மாற்றங்கள் பெரிதும் இன்றி இருந்துள்ளதை போல் அமையப்பெற்றுள்ளது.
தொன்மங்களிலும், இலக்கியத்திலும், வரலாற்றிலும் பல வாள்களுக்கு கொடுக்கப்பட்ட பெயர்களில் இருந்து அவற்றுக்கு இருந்த மதிப்பை பற்றி அறிந்துகொள்ள இந்த வாள்கள் பெறும் உதவியாக இருக்கும். இவற்றை பயன்படுத்தியோர் தேர்ச்சி பெற்ற போர்க்கலைகளை கற்றவர்களாகவே இருந்திருப்பார்கள்.
உடைவாள் போன்ற குத்தும் கத்தி பின் குறுவாளாக மாறின என்பதற்கு சான்றாக இரண்டடியில் ஒரு சிறு வாள் கிடைத்துள்ளது. இவ்வாள் இலக்கை வேகமாகவும், ஆழமான குத்துக்காயம் ஏற்படும் படியும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் நேராக நீண்ட மெல்லிய சமநிலை வடிவமைப்பு போன்று உள்ளது. இவ்வாள் எதிரிகளை போரில் அச்சமூட்டுவதற்காக பயன்படுத்தியிருக்கலாம்.
மற்ற இரு வாள்கள் வளைந்த அலகுகள் கொண்ட வாள்களாக போரிடுவதற்கு மிகவும் கூடுதலான எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை குதிரைப்படையில் இருந்து எதிரிகளுடன் போரிடுவதற்காக பயன்படுத்திருக்கக்கூடும்.
இவை 10–ம் நூற்றாண்டிலிருந்து 12–ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் கொங்கு மண்டலத்தை ஆண்ட ஹொய்சாலா பேரரசில் இருந்த தண்டநாயக்கர்கள் பயன்படுத்திய வாளாக இருக்கலாம். இதேபோல் நீளமான வாள் ஒன்றில் எழுத்து அல்லது சித்திரம் போன்ற சில குறிப்புகள் காணப்படுகின்றன. ஆய்வுக்கு உட்படுத்தினால் மட்டுமே அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் தெரியவரும்.
பல நூற்றாண்டுகளாக போயர் சமூகம் சார்ந்த பாலம தண்டநாயக்கர் குல கோவிலாக இருப்பதை இதற்கு காரணமாக குறிப்பிடலாம். இங்கு கிடைத்துள்ள பழங்கால வாள்களை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளோம். அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடத்தினால் மேலும் போர்க்கருவிகள் கிடைக்கலாம் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.