நிலத்தை அளவீடு செய்து கொடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நிலத்தை அளவீடு செய்து கொடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Sept 2018 3:15 AM IST (Updated: 4 Sept 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

2002-ம் ஆண்டு பட்டா பெற்றவர்களுக்கு நிலத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி,


தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகரத்தினம் மற்றும் நிர்வாகிகளும், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை, ஆவரம்பட்டி, தெப்பம்பட்டி, மேக்கிழார்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர். கடந்த 2002-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் பட்டா பெற்றவர்களுக்கு இன்னும் நிலம் அளவீடு செய்து கொடுக்கப்படவில்லை என்றும், நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘மேக்கிழார்பட்டி, பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, ஆவரம்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 200 பேருக்கு கடந்த 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு விழாவில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டுமனைப்பட்டா வழங்கினார். அவ்வாறு பட்டா பெற்ற மக்களுக்கு நிலம் அளவீடு செய்து கொடுக்கப்படாமல் உள்ளது. பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது நிலம் அமைந்துள்ள இடத்தில் உள்ள பாறையை அகற்றினால் தான் பாதை வசதி கிடைக்கும். அந்த பாறையை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பாறைகளை அகற்றுவதுடன், நிலத்தை அளவீடு செய்து உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், பாறையை அகற்ற ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் பயனாளிகளுக்கு நிலம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

Next Story