கிணற்றில் குதித்த இளம்பெண்; காப்பாற்ற முயன்ற 3 வாலிபர்கள் தண்ணீரில் தத்தளிப்பு
வேடசந்தூர் அருகே பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு கிணற்றில் குதித்து, இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்ற முயன்ற வாலிபர்கள் 3 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த எரியோடு மீனாட்சிபுரத்தை சேர்ந்த சின்னச்சாமி மகள் கார்த்திகா (வயது 19). இவர், நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் சண்டைபோட்டுள்ளார். பின்னர் அவர் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். நள்ளிரவு நேரத்தில் எரியோட்டில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான கிணற்றில் திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
100 அடி ஆளமுள்ள அந்த கிணற்றில் 30 அடிஅளவில் தண்ணீர் இருந்தது. இதனால், கார்த்திகா நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (28) என்பவர் கார்த்திகா கிணற்றில் குதித்து உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் இருந்த உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு கிணற்றில் குதித்து கார்த்திகாவை காப்பாற்ற முயன்றார்.
இதையடுத்து, அங்கு வந்த பிரகாசின் அண்ணன் ராம்குமார் (30), உறவினர் மணிகண்டன் (28) ஆகியோரும் கிணற்றில் குதித்தனர். 3 பேரும் சேர்ந்து நீரில் மூழ்கிக்கொண்டிருந்த கார்த்திகாவை காப்பாற்றினர். இருப்பினும், கார்த்திகா மயங்கிய நிலையில் இருந்தார். மேலும் கிணற்றில் படி இல்லாததால், மேலே வர முடியாமல் கார்த்திகாவையும் பிடித்துக்கொண்டு வாலிபர்கள் 3 பேரும் நீச்சல் அடித்தபடியே இருந்துள்ளனர்.
இதற்கிடையே, அங்கு வந்த தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் ஜீவா தலைமையிலான பொதுமக்கள் கயிறு மூலம் கட்டிலை உள்ளே இறக்கினர். அதில், கார்த்திகாவை மட்டும் ஏற்றி மேலே கொண்டு வந்தனர். ஆனால், மற்ற 3 பேரும் மேலே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கயிறு மூலம் பிரகாஷ், ராம்குமார், மணிகண்டன் ஆகியோரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் 4 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story