கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணிகள் 75 சதவீதம் நிறைவு மு.க.ஸ்டாலினுக்கு, வெல்லமண்டி நடராஜன் பதில்


கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணிகள் 75 சதவீதம் நிறைவு மு.க.ஸ்டாலினுக்கு, வெல்லமண்டி நடராஜன் பதில்
x
தினத்தந்தி 3 Sep 2018 11:00 PM GMT (Updated: 3 Sep 2018 9:23 PM GMT)

கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணிகள் 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என்று மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதில் அளித்துள்ளார்.

திருச்சி,

முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைந்த மதகுகளை தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, “கொள்ளிடம் அணையில் உடைந்த மதகுகள் சீரமைப்பு பணியில் 40 சதவீதம் பணிகள் கூட முடிவடையவில்லை” என்று குற்றம் சாட்டினார். மு.க.ஸ்டாலின் சென்ற பிறகு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் அணையில் சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்கையில், “முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைந்த மதகுகளை சீரமைக்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. நாளை (அதாவது இன்று) இரவுக்குள் தண்ணீர் வீணாக செல்வது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும். அதன்பிறகு வடகரையில் பெருவளை வாய்க்கால், அய்யன் வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.

காவிரி ஆறு, கொள்ளிடம் ஆறு தெரியாமல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பழங்கால பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று அவர் கூறுவது நகைப்புக்குரியது. இதேபோல திருவானைக்காவல் கொள்ளிடம் பழைய இரும்பு பாலம் உடைந்த போது ராணுவத்தின் உதவியை நாட வேண்டும் என்று அவர் கூறியதும் நகைப்புக்குரியது” என்றார்.

இதேபோல் சீரமைப்பு பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கொள்ளிடத்தில் 200 கனரக லாரிகள் மூலம் பெரிய பாறாங்கற்களை கொண்டு உடைப்பை சரிசெய்யும் பணி அதிவேகமாக நடைபெற்று வருகிறது. பணியின் முன்னேற்றம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்காணித்து கேட்டறிந்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும், மாவட்ட கலெக்டரும் இரவு, பகல் பாராமல் முக்கொம்பில் முகாமிட்டு உடைப்பை சரி செய்யும் பணியை துரிதப்படுத்தி வருகின்றனர். காவிரியில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் உடைப்பை சரிசெய்யும் பணி மிகப்பெரிய சவாலாக உள்ளது.

நாளை(அதாவது இன்று) காலையில் பெரிய பாறாங்கற்கள் கொண்டு வரப்பட்டு உடைப்பு சரி செய்யப்படும். மேலும் கடற்கரையோரத்தில் அரிப்பை சரிசெய்யக்கூடிய பெரிய பாறாங்கற்களும் முக்கொம்பிற்கு கொண்டு வரப்படும். இன்று இரவுக்குள் முழுமையாக உடைப்புகள் சரிசெய்யும் பணி நிறைவடைய வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் கிளை வாய்க்கால்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படும், என்றார்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் எம்.பக்தவச்சலம், தலைமைப் பொறியாளர் (திட்டம் மற்றும் வடிவமைப்பு) செல்வராஜ், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் கணேசன், ஸ்ரீரங்கம் தாசில்தார் கனகமாணிக்கம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story