குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் படையெடுத்த கிராம மக்கள்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் படையெடுத்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 4 Sept 2018 3:30 AM IST (Updated: 4 Sept 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் படையெடுத்து வந்து, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல், 


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.

கூட்டத்தில், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் மாங்கரை நெட்டியபட்டி ஏ.டி.காலனியை சேர்ந்த மக்கள் காலிக்குடங்களுடன் வந்து குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஏ.டி.காலனியில் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு கடந்த 5 ஆண்டுகளாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது. மேலும் தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதி இருளில் மூழ்கி விடுகிறது. எனவே, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதி செய்து தரவேண்டும், என்று கூறியிருந்தனர்.

அதேபோல் கன்னிவாடி அருகேயுள்ள கசவனம்பட்டி ஊராட்சி போத்திநாயக்கன்பட்டி கிராம மக்களும், காலிக்குடங்களுடன் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், போத்திநாயக்கன்பட்டியில் ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது 2 ஆழ்துளை கிணறுகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. 6 ஆழ்துளை கிணறுகளுக்கு மின்இணைப்பு மற்றும் மோட்டார் இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிற கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

மேலும் திண்டுக்கல் அருகேயுள்ள அடியனூத்து ஊராட்சி உரிமைக்காரன்பட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கிறோம். கிராமத்தில் 8 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக் கப்பட்டுள்ளன. எனினும், முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் விலைக்கு குடிநீர் வாங்கி பயன்படுத்துகிறோம். கிராமத்துக்கு முறையாக குடிநீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தனர். இதுதவிர நிலக்கோட்டை அருகேயுள்ள தொட்டம்பட்டி கிராம மக்கள் குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதி கேட்டு மனு கொடுத்தனர்.

கொடைக்கானல் அருகேயுள்ள வெள்ளக்கவி மலைக்கிராம மக்கள் கொடுத்த மனுவில், வெள்ளக்கவி கிராமத்தில் முக்கிய தேவைகளுக்கு வட்டக்கானல் பகுதிக்கு தான் செல்ல வேண்டும். ஆனால், வெள்ளக்கவி-வட்டக்கானல் இடையே சாலை வசதி இல்லை. இதனால் 6 கி.மீ. தூரம் கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து செல்கிறோம். விளை பொருட்களை தலைச்சுமையாக எடுத்து செல்ல வேண்டியது உள்ளது. எனவே, வருவாய்த்துறை நிலம் வழியாக தார்சாலை அமைக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

தாண்டிக்குடியை சேர்ந்த விவசாயி ராஜலிங்கம் வறட்சி நிவாரணம் கேட்டு மனு கொடுத்தார். அதில், தாண்டிக்குடியில் 5 ஏக்கர் 40 சென்ட் பரப்பளவில் காபி, மிளகு, வாழை ஆகியவை பயிரிட்டு இருந்தேன். கடந்த ஆண்டு வறட்சியால் அனைத்தும் கருகி விட்டன. அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

Next Story