போலீசார் தாக்கியதாக கூறி பழ வியாபாரிகள் ‘திடீர்’ சாலை மறியல்


போலீசார் தாக்கியதாக கூறி பழ வியாபாரிகள் ‘திடீர்’ சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Sept 2018 3:14 AM IST (Updated: 4 Sept 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

பழ வியாபாரியை போலீசார் தாக்கியதாக கூறி சக வியாபாரிகள் ‘திடீர்’ சாலை மறியலில் ஈடுபட்டதால் ஆரணியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி, 


ஆரணி நகரில் காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, புதிய பஸ் நிலையம் செல்லும் வழிகளில் பழ வியாபாரிகள் தள்ளுவண்டிகளிலும், மாட்டுவண்டிகளிலும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இதனால் அந்த பாதைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பு கடைகள் செயல்பட்ட பகுதிக்கு சென்றனர். அப்போது காந்தி ரோட்டில் பழ வியாபாரிகள் சங்க செயலாளர் ஜெயராமனின் தந்தை நடராஜன் நடைபாதையில் பழக்கடை வைத்திருந்ததாகவும் அவரை போலீசார் எட்டி உதைத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் சக வியாபாரிகள் குற்றம்சாட்டினர். போலீசாரை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பழ வியாபாரிகள் ஒன்று திரண்டு மார்க்கெட் ரோட்டில் ‘திடீர்’ சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜமீஸ்பாபு, சங்கர், தரணி, கோவிந்தசாமி மற்றும் தாசில்தார் கிருஷ்ணசாமி, வருவாய் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி உள்பட அலுவலர்கள் அங்கு வந்தனர்.

“சாலை மறியலை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் நேரிடையாக பேசி முடிவு செய்து கொள்ளலாம்” என விடுதலை சிறுத்தை கட்சியின் தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் வக்கீல் சுப்பிரமணியன் பழ வியாபாரிகளை ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், “நான் சத்தமிட்டு பேசியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. எனக்கு போக்குவரத்திற்கு பிரச்சினையில்லாமல் நடந்து கொள்ள வேண்டும். மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார். பின்னர் அனைவரும் சமாதானமாகி எழுந்து சென்றனர். 

Next Story