பாலாற்றின் குறுக்கே ஆந்திராவில் ரூ.1 கோடியில் மேலும் ஒரு தடுப்பணை
பாலாற்றின் குறுக்கே ஆந்திராவில் ‘ஹந்திரி நீவா’ திட்டத்தின்கீழ் பிரமாண்ட அளவில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. ஏற்கனவே 22 அணைகள் கட்டிய நிலையில் இப்போது கட்டும் அணையால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு கிடைக்காத அபாயம் ஏற்பட்டு உள்ளது.
வாணியம்பாடி,
தமிழகத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் ஒன்றான பாலாறு முந்தைய காலத்தில் அப்போதைய ஒருங்கிணைந்த வேலூர், காஞ்சீபுரம், தற்போதைய திருவள்ளூர் மாவட்டமாக உள்ள பகுதிகளை வளமாக்கியது. கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் இந்த ஆறு, ஆந்திரா வழியாக வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது.
மழைக்காலங்களில் அப்போதெல்லாம் தமிழகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீரை வீணாகாமல் தடுக்க நமது முன்னோர்கள் எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு கால்வாய்கள் அமைத்து அதனை ஏரி, குளங்களுக்கு திருப்பிவிட்டு நிரம்ப செய்தனர். இதன் மூலம் மேற்கண்ட மாவட்டங்களில் விவசாயம் செழித்தோங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன.
ஆனால் இப்போது மணல் கொள்ளையால் பாலாறு தனது தண்ணீர் வழித்தடத்தை இழந்துள்ளதோடு அதிலிருந்து ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி கால்வாய் இருந்த தடமே இல்லாமல் போயுள்ளது. அரசியல் செல்வாக்குள்ளவர்கள் மணல் கடத்தும் நிலையில் அதிகாரிகளும் அதனை கண்டுகொள்ளாமல் உடந்தையாக உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் நீர்வளத்தை மேம்படுத்த அந்த மாநில முதல்-மந்திரி இப்போது ‘ஹந்திரி நீவா’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் நோக்கமே பாசனத்துக்கும் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதே ஆகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி புதிய அணைகள், நீர்வரும் பாதைகளை தூர்வாருதல், ஏரி, குளங்களை வெட்டுதல் போன்ற பணிகள் நடக்கின்றன.
தடுப்பணைகள்
ஏற்கனவே ஆந்திராவில் பாலாற்றில் 21 தடுப்பணைகள் இருந்தன. இவற்றில் சாந்திபுரம் மற்றும் கணேசபுரத்தில் மிகப்பெரிய அணைகள் கட்டப்பட்டதும் அடங்கும். அதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் பாலாறு நுழையும் இடமான புல்லூரில் பிரமாண்ட தடுப்பணை கட்டப்பட்டது.
இதன்பின்னர் மழைக்காலங்களில் வெள்ளம் வரும் நேரங்களிலும் தமிழகத்திற்கு தண்ணீர் வராமல் தடுப்பணைகள் மூலம் தடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு குப்பம் அருகே தடுப்பணை கட்டப்பட்டது. இது குறித்து அறிந்த தமிழக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. அப்போது தமிழக முதல்-அமைச்சர் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தையடுத்து தடுப்பணை கட்டும் பணி நிறுத்தப்பட்டது.
ஆனால் இப்போது வாணியம்பாடியிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர பகுதியில் பாலாற்றில் கிளை ஆறு சேரும் இடத்தில் கங்குந்தி ஊராட்சி பெத்தவங்கா என்ற இடத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட தடுப்பணையை 10 அடி உயரத்தில் ஆந்திர அரசு கட்டி வருகிறது. இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் இந்த அணை உடையாத வகையில் கட்டப்படுகிறது.
60 சதவீத பணிகள்
முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் ‘ஹந்திரி நீவா’ திட்டத்தின்கீழ் கட்டப்படும் இந்த தடுப்பணையின் கட்டுமான பணிகள் 60 சதவீதம் முடிந்து விட்டன. மழைக்காலம் தொடங்குவதற்குள் இது கட்டி முடிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அந்த பணி முடிந்தால் வடகிழக்கு பருவமழையின்போது பாலாற்றில் வெள்ளம் வந்தாலும் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவிடாமல் தடுக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த அணை கட்டப்படுவது குறித்து தமிழக பொதுப்பணித்துறையினரும் அறிந்து கொள்ளாமல் விட்டுவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்
எனவே தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க தமிழக ஆட்சியாளர்கள் இப்போதே தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து வாணியம்பாடி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நவீன சிற்பியாக செயல்பட்டு அந்த மாநிலத்துக்கு இன்னும் 500 ஆண்டுகளுக்கு என்ன தேவையோ அதனை தனது ஆட்சிக்காலத்திலேயே நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். நீர்ப்பாசன திட்டத்தை பொறுத்தவரை ‘ஹந்திரி நீவா’ திட்டத்தை அவர் செயல்படுத்துகிறார். அதுவும் குப்பம் தொகுதி என்பது அவரது சொந்த தொகுதியாகும். ஆறுகளில் நீர்வரத்துக்கால்வாய்கள் உள்ள வழித்தடங்களை கண்டறிய அவர் பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டு அதன்படி அந்த இடங்களில் தூர்வார நடவடிக்கை எடுப்பதோடு புதிதாக குளங்கள், ஏரிகளை அவர் உருவாக்கி வருகிறார். மலைப்பகுதிகளில் இருந்து காட்டாறுகள் பாலாறு உள்பட மாநிலத்தில் முக்கிய ஆறுகளில் சேரும் இடத்தில் இது போன்ற தடுப்பணைகளை அவர் கட்டி வருகிறார்.
ஆனால் தமிழகத்தில் பாலாற்றில் மணல் கொள்ளைதான் பிரதானமாக நடக்கிறது. குப்பம் தொகுதி தலைமையிடமான குப்பத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளது. இங்கு பொதுமக்கள் எந்த தேவை குறித்தும் மனு கொடுத்தால் அந்த மனுவை உடனடியாக ஸ்கேன் செய்து அதனை அமராவதியில் உள்ள முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடுவின் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். அவர் தினமும் இரவு ஒரு மணி நேரம் இந்த மனுவை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு ‘மெமோ’ கொடுக்கப்படுவதோடு சரியாக செயல்படாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்தும் அவர் நடவடிக்கை எடுக்கிறார்.
சாலை கட்டமைப்பு உள்பட அனைத்து துறையிலும் ஆந்திர மாநிலத்தை அவர் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்கிறார். ஆனால் தமிழகத்தில் எந்த திட்டத்தையும் ஆட்சியாளர்கள் செய்யாமல் பதவியை காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளனர். எனவே இனியாவது ஆட்சியாளர்கள் விழித்துக்கொண்டு எதிர்கால சந்ததியினருக்காக திட்டங்களை தீட்ட வேண்டும். பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்க புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும். மணல் கடத்துபவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதோடு அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
Related Tags :
Next Story