உணவில் விஷம் கலந்து கொடுத்து பெண் தொழில் அதிபரை கொல்ல முயன்ற வேலைக்காரர் கைது


உணவில் விஷம் கலந்து கொடுத்து பெண் தொழில் அதிபரை கொல்ல முயன்ற வேலைக்காரர் கைது
x
தினத்தந்தி 4 Sept 2018 5:58 AM IST (Updated: 4 Sept 2018 5:58 AM IST)
t-max-icont-min-icon

உணவில் விஷம் கலந்து கொடுத்து பெண் தொழில் அதிபரை கொல்ல முயன்ற வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

தென்மும்பை கொலபாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ஜினியா (வயது65). இவர் பல நிறுவனங்களில் இயக்குனராக இருந்து வருகிறார். ஜினியாவின் மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். அவரது வீட்டில் ரியால் மண்டல் (33) என்ற வாலிபர் வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.

அவர் தான் ஜினியாவுக்கு தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து வந்தார். அண்மையில் சில தினங்களாக சாப்பிட்ட பின்னர் ஜினியாவுக்கு குமட்டல் மற்றும் மயக்க உணர்வு இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் தாயை பார்ப்பதற்காக ஜினியாவின் மகன் மற்றும் மகள் கொலபா வந்தனர். அப்போது, அவர் தனக்கு ஏற்பட்டு உள்ள உடல் நலபாதிப்பு குறித்து அவர்களிடம் தெரிவித்தார்.

உடனே இருவரும் தாயை தங்களது குடும்ப மருத்துவரிடம் அழைத்துச்சென்று காண்பித்தனர். டாக்டர் பரிசோதித்ததில் அவர் சாப்பிட்ட உணவில் கொஞ்சம், கொஞ்சமாக எலி மருந்து கலந்து கொடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதைக்கேட்டு ஜினியா மற்றும் அவரது மகன், மகள் அதிர்ச்சியில் உறைந்தனர். வேலைக்காரர் ரியால் மண்டல் தான் ஜினியாவின் உணவில் விஷம் வைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார். என்ன காரணத்திற்காக ெபண் தொழில் அதிபரின் உணவில் அவர் விஷம் கலந்து கொடுத்து வந்தார் என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story