ரூபாயின் மதிப்பு சரிவும், விளைவுகளும்


ரூபாயின் மதிப்பு சரிவும், விளைவுகளும்
x
தினத்தந்தி 4 Sep 2018 4:46 AM GMT (Updated: 4 Sep 2018 4:46 AM GMT)

உலக நிலையில் இந்தியா ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. உள்நாட்டு அரசியல் ஆரவாரத்திலும், அன்றாடப் பொருளாதாரச் சிக்கல்களிலும் சூழ்ந்திருக்கின்ற பெரும்பாலான மக்கள் அதனை உணர்ந்தாலும் அதன் தீவிரத்தை அறியவில்லை. ஆனால் அது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ந்திய ரூபாயின் வெளிநாட்டு மாற்று மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது. இது எங்கே சென்று நிற்கும் என்பது தெரியவில்லை. பொருளியல் அறிஞர்களின் கருத்துகளும், எச்சரிக்கைகளும் உரத்துக் கேட்கவில்லை. ரூபாயின் உள்நாட்டு மதிப்பு பண வீக்கத்தின் விளைவாகத் தொடர்ந்து குறைகிறது. இது நமக்குப் பழக்கப்பட்டுவிட்டது.

இந்திய ரூபாயின் வெளிநாட்டு மாற்று மதிப்பும் தொடர்ந்து சறுக்குகின்றது. இப்போது அது தீவிரமடைந்திருப்பதால், எல்லோருக்கும் கவலை. நாம் இறக்குமதிக்கு கொடுக்கின்ற விலை அதிகம். இதன் தாக்கம்தான் டீசல், பெட்ரோல் விலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கூடிக்கொண்டே செல்வது.

31-8-2018 செய்திகளின்படி ஒரு டாலரின் மாற்று மதிப்பு ரூ.70.96. 28-8-18 அன்று டாலரின் மதிப்பு ரூ.70.10. இது எங்கு சென்று மையங்கொள்ளும் என்பதை ஊகிக்க இயலவில்லை. வெளிநாட்டுப் பண மதிப்பில் (குறிப்பாக டாலரின் மாற்று மதிப்பில்) இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவதென்பது தொடர்கதை. ஆனால் அதன் வேகம் குதிரைப் பாய்ச்சலில் செல்லும்போது நமது கவலை கூடுகிறது.

இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ல் ஒரு டாலருக்கு மாற்று மதிப்பு ரூ.68.83 ஆக குறைந்தது. இதற்குக் காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் தங்களது பணத்தைத் திரும்பப் பெற்றது. இப்போது அதற்கும் கீழ் பண மதிப்புக் குறைவது ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றது.

இங்கு நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பணமதிப்புக் குறைப்பு என்பது ஒரு நாட்டின் அரசே பல்வேறு காரணங்களுக்காக அதனுடைய நாணயத்தின் மாற்று மதிப்பைக் குறைப்பது. அதன்மூலம் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முயல்வார்கள். நமது நாட்டில் சீனாவோடும், பாகிஸ்தானோடும் ஏற்பட்ட போரின் விளைவாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, 1966-ம் ஆண்டு ஜூன் மாதம் ரூபாயின் மதிப்பை 36.5 சதவீதம் குறைத்தார்கள்.

அடுத்து ‘கல்ப்’ (வளைகுடா) போரின் விளைவாக எண்ணெய் விலை கூடியபோது, நமது அன்னியச் செலாவணி செலுத்து நிலையைச் சீர்செய்ய 1991-ம் ஆண்டு ஜூலையில் பண மதிப்பை 18-19 சதவீதம் குறைத்தது. இவை நாமே மேற்கொண்ட நடவடிக்கை.

பண மதிப்பிழப்பு என்பது உலக அங்காடி நிலைக்கேற்ப பொருட்கள், சேவைகளின் தேவை-அளிப்பு நிலையை ஒட்டி ஒரு நாட்டின் பணத்தின் மதிப்புக் குறைவது. இதனை கட்டுப்படுத்த தொடர் முயற்சி தேவை. இதனை நெறிப்படுத்தாவிட்டால் இதன் விளைவுகள் பொருளாதாரத்தில் பரவும்; பாதிக்கும்.

இப்போது நமது ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களை சுட்டிக்காட்டலாம். உலக நாடுகளில் வளர்கின்ற அங்காடிகளைக் கொண்ட நாடுகளாகப் பட்டியிலிடப்பட்டிருக்கும் நாடுகளில் நமது நாடும் ஒன்று. நம்மைப் போன்ற நாடான துருக்கி பொருளாதாரச் சிக்கலில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கிருந்து வெளிநாட்டு மூலதனம் வெளியேறுகிறது. இதன் தாக்கம் நமது நாட்டிலும் பிற வளரும் அங்காடிகளைக் கொண்ட நாடுகளிலும் இருக்கிறது.

ஒரு நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதி வாணிப நிலைக்கும் அந்த நாட்டின் பண மதிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருப்பது சாதக வாணிபநிலை. ஆனால் நமது நாட்டில் இறக்குமதி மிகுதியாக பாதக வாணிப நிலையே இருக்கிறது. நமது நாட்டில் ஏற்றுமதியை விட இறக்குமதி ரூ.11 லட்சம் கோடி மிகுதி. இதைதான் வாணிப பற்றாக்குறை என்கிறோம்.

நமது வாணிபப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய் இறக்குமதி. நமது நாட்டில் பெட்ரோல், டீசலின் தேவை தொடர்ந்து கூடிக்கொண்டு போகிறது. அவற்றின் இறக்குமதியை கட்டுப்படுத்த இயலாது. உலக அங்காடியில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா போன்ற நாடுகள் எண்ணெய் விலையை உயர்த்திக் கொண்டு போகின்றன. எண்ணெய் உற்பத்தியில் நாம் இதுவரை கவனம் செலுத்தவில்லை. உடனடியாக செய்ய இயலாத நிலையில் நமது பண மதிப்புக் குறைகிறது.

அரசின் தொழில்-பொருளாதாரக் கொள்கை, பணத்தாள்கள் சீர்திருத்தம், கருப்புப் பண ஆதிக்கம், இயற்கைச் செல்வங்கள் சூறையாடல், லஞ்சம், ஊழல் போன்ற காரணங்களும் உலக அளவில் நமது பொருளாதாரப் பங்களிப்பை பாதிக்கின்றன.

பண மதிப்பு வீழ்ச்சியை நமது பொருளாதாரத்தின் உண்மையான நிலையைக் காட்டும் காலக்கண்ணாடியாக கருதலாம். இன்றையச் சிக்கலைத் தீர்ப்பது மட்டுமல்ல, எப்படி ஒரு நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவது என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும்.

பொருளியல் அறிஞர்கள், ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள டாலர் கையிருப்பை விற்று ரூபாயின் மதிப்பை தக்க வைக்க வேண்டும் என்கிறார்கள். இந்த முயற்சியை மேற்கொள்வது மட்டுமே நிரந்தர தீர்வாகாது. நமது நாட்டின் எல்லா துறைகளின் உற்பத்தியையும் உயர்த்த வேண்டும். நம்மால் உற்பத்தி செய்யக்கூடிய எந்த பொருளையும் இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது.

குறிப்பாக, வேளாண்மை, தொழில்களின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். நமது உற்பத்தித் தொழில்களுக்குத் தக்க பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். அமெரிக்கா கூட சில துறைகளுக்கு மானியம் வழங்கியும், பாதுகாப்பளித்தும் தற்காப்புக் கொள்கையைப் பின்பற்றுவதைக் கவனிக்க வேண்டும். அரசின் பொதுநிதிப் பற்றாக்குறைக்கும், மக்களின் நுகர்வுப் பெருக்கத்துக்கும் காரணம், மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதுதான். இது நுகர்வைக் கூட்டுகிறது.

இந்த திட்டங்களை உற்பத்திப் பெருக்கம் சேவைப் பணிகளோடு இணைத்து செயல்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக 100 நாள் வேலைத்திட்டம் போன்றவற்றை வேளாண்மை வளர்ச்சி, அணைகள் விரிவாக்கம் ஆகியவற்றோடு இணைத்துச் செயல்படுத்தலாம்.

நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார், ‘நமது நாட்டில் தனிநபர் வருவாய் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயரும் போது ரூபாய் மதிப்பு நிலைப்படும். இந்த நிலையை எட்ட எல்லா இளைஞர்களுக்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டும்’ என்கிறார்.

இந்த சிக்கலுக்கும் நமது எல்லாப் பொருளாதாரச் சிக்கல்களுக்கும் தீர்வு, நமது நிலையான பொருளாதார வளர்ச்சியில் இருக்கின்றது. நமது ஆட்சியாளர்கள் வெறும் அரசியல் தலைவர்களாக மட்டுமில்லாமல் தொலைநோக்கோடு நாட்டை நிர்மானிப்பவர்களாகவும் செயல்பட வேண்டும்.

நமது நாட்டில் பதுங்கியிருக்கும் கருப்பு பணத்தையும், வெளிநாட்டு வங்கிகளில் முடங்கி கிடக்கும் இந்திய பணத்தையும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் கையிருப்பு பணத்தையும், நமது நாட்டு மக்களின் சிறு, பெரும் சேமிப்புகளையும் முதலீடு செய்தால் அன்னிய செலாவணி சிக்கலை தீர்ப்பதோடு, பொருளாதார வளர்ச்சியில் வீறுநடை போட முடியும்.

-டாக்டர் மா.பா.குருசாமி, காந்திய பொருளியல் அறிஞர்

Next Story