தூத்துக்குடி மாவட்டத்தில் 3 கிராமங்களில் மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி மாவட்ட கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 கிராமங்களில் மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 கிராமங்களில் மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–
சுனாமி ஒத்திகை
தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து ஹைதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு தெரிவிக்கின்றது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து கடலோர மாவட்டங்களில் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி நடத்த உள்ளது.
அதன்படி சுனாமி வரும் பட்சத்தில் இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக சுனாமி எச்சரிக்கை முன் அறிவிப்புகள் பெறப்படும் போது அந்த தகவல் பரிமாற்றமானது அரசுத்துறைகள் மூலம், பாதிக்கப்படும் மக்களுக்கு எவ்வாறு சென்றடைகின்றது என்பதை ஒத்திகையின் போது சோதிக்கப்படும்.
3 கிராமங்கள்
இந்த மாதிரி ஒத்திகை பயிற்சியானது தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) 3 கிராமங்களில் நடத்தப்பட உள்ளது. தூத்துக்குடி தாலுகாவில் இனிகோ நகர், மீளவிட்டாள் பகுதி–2, சாத்தான்குளம் தாலுகாவில் படுக்கப்பத்து, விளாத்திகுளம் தாலுகாவில் வேம்பார் பகுதியில் ஒத்திகை பயிற்சி நடத்தப்பட உள்ளது. எனவே இதுகுறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமோ பீதியோ அடைய தேவையில்லை. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.