2 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீர் வரத்து வாய்க்கால் சொந்த செலவில் பொதுமக்கள் அமைத்தனர்


2 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீர் வரத்து வாய்க்கால் சொந்த செலவில் பொதுமக்கள் அமைத்தனர்
x
தினத்தந்தி 4 Sep 2018 10:45 PM GMT (Updated: 4 Sep 2018 7:00 PM GMT)

ஒதியம் கிராமத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீர் வரத்து வாய்க்காலை பொது மக்கள் தங்கள் சொந்த செலவில் அமைத்தனர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒதியம் கிராமம் உள்ளது. ஒதியம் மற்றும் சமத்துவபுரம் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக சுத்து குளம், வட்ட குளம், காமா குளம், பாப்பான் குட்டை மற்றும் பெருமாள் கோவில், பிள்ளையார் கோவில், காலனி தெரு ஆகிய இடத்தில் கிணறுகள் உள்ளது. இந்த கிணறுகள் அனைத்திலும் குடிநீர் எடுப்பதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளதால் பயன்பாட்டில் இல்லை. அந்த கிணறுகளில் இருந்து ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் எடுப்பதில்லை. குளங்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

கால காலமாக பொதுமக்கள் குடிநீர் ஆதாரமாக சுத்து குளம் நீரையே எடுத்து சென்று வடிகட்டி அதையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 7 வருடமாக பெரம்பலூர் மாவட்டத்தில் மழை குறைவாக உள்ளதாலும், சுத்து குளத்திற்கு மழைநீர் வருகின்ற வரத்து வாய்க்கால் தூர்ந்து விட்டதாலும் குளத்திற்கு நீர் வருவது தடைபட்டது.

இதனால் இப்பகுதி மக்கள் அருகிலுள்ள குன்னம், அசூர், மூங்கில் பாடி, பெரியம்மா பாளையம், ஆதனூர், சித்தளி ஆகிய கிராமங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று குடங்களில் குடிநீர் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊர் பொதுமக்கள் அரியலூர்-பெரம்பலூர் செல்லும் மெயின் ரோட்டில் இருந்து சுத்துகுளம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடதுபுறமாக புதிதாக வாய்க்காலை அமைத்து தரக்கோரி பலமுறை கிராமசபை கூட்டத்திலும், ஊராட்சிமன்ற அலுவலகத்திலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுநாள் வரை கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. ஆனால் இந்த கோரிக்கை கிராம சபை கூட்டத்தில் ஏற்கப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் வரத்து வாய்க்கால் சீரமைத்ததாக தீர்மானம் வாசிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி பொது மக்கள் தாங்களாகவே முன்வந்து ஒன்று கூடி 2 கிலோ மீட்டர் தூரம் வாய்க்காலை புதிதாக அமைக்க முடிவு செய்தனர். பல எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த 7 நாட்களாக பொக்லைன் எந்திரத்தை கொண்டு பெரம்பலூர்-அரியலூர் மெயின் ரோட்டிலிருந்து சுத்து குளம் வரை புதிதாக குடிநீர் வரத்து வாய்க்கால் அமைத்தனர்.

பொதுமக்கள் ரூ.3 லட்சம் செலவில் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள குடிநீர் வரத்து வாய்க்காலை 6 அடி அகலத்திற்கு 4 அடி முதல் 8 அடி வரை ஆழம் தோண்டி சீரமைத்தனர். மேலும் ஊரில் உள்ள கிணறுகளை சுத்தப்படுத்தி, அதில் மின் மோட்டார் அமைத்து குழாய்கள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story