வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 5 Sept 2018 3:15 AM IST (Updated: 5 Sept 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரி,


கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், நேற்று ஹெல்மெட் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு, ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குமார், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

அப்போது அவர்கள் பேசியதாவது:-

கடந்த ஆண்டில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஏராளமானோர் விபத்தில் இறந்துள்ளனர். தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மோட்டார் சைக்கிளில் செல்லும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும். மோட்டார்சைக்கிளில் ஓட்டிச் செல்பவரைவிட பின்னால் அமர்ந்திருப்பவர்கள் அதிகம் உயிரிழக்கின்றனர்.

எனவே பின்னால் அமர்ந்திருப்பவர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், அனைத்து வகையான ஓட்டுனர் சான்று பெற வரும், 250 பேர்களுக்கு தினமும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், போக்குவரத்து விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து விதிகளை மதித்து விலை மதிப்பில்லாத உயிர்களைக் காக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பின்னர் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாராட்டு சான்று மற்றும் இனிப்புகளை வழங்கினார்கள். முன்னதாக தனியார் கல்லூரியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த குறும்படம் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மாணவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கேட்டுக் கொண்டனர். 

Next Story