2 கி.மீ. தூரம் தலையில் சத்துணவை சுமந்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் பெண்


2 கி.மீ. தூரம் தலையில் சத்துணவை சுமந்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் பெண்
x
தினத்தந்தி 5 Sept 2018 3:00 AM IST (Updated: 5 Sept 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே மலை கிராம பள்ளியில் சமையல் கூட வசதி இல்லாததால் 2 கி.மீ. தூரம் உள்ள மற்றொரு பள்ளியில் ஒரு பெண் சத்துணவு தயார் செய்து அதை தலையில் சுமந்து மலை கிராம பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு கொடுத்து வருகிறார். எனவே பள்ளியில் சமையல் கூட வசதி செய்ய வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

தேன்கனிக்கோட்டை, 


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ளது கொச்சாவூர். மலை கிராமமான இந்த ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 60 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினை இந்த பள்ளியில் இருந்தது. இதன்பின்னர் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கடந்த 2014-15-ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் கொச்சாவூரில் புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. பள்ளியில் சமையல் கூடம் கட்டாததால் இங்கு படிக்கும் மாணவர்களுக்கான உணவு இந்த பள்ளியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொடைகரை மேல்நிலைப்பள்ளியில் தயார் செய்யப்பட்டு கொச்சாவூர் பள்ளிக்கு கொண்டு வரப்படுகிறது.

கொடைகரை மேல்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு 37 வயதான மகேஸ்வரி என்ற பெண் சத்துணவு தயார் செய்கிறார். கொச்சாவூர், கொடகரை ஆகிய இடங்களில் உள்ள 2 பள்ளிகளைச் சேர்ந்த 240 மாணவ, மாணவிகளுக்கும் இவரே சமையல் செய்கிறார். சமையல் பணி முடித்த பின் சத்துணவை பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொண்டு மகேஸ்வரி தலை சுமையாக கொடைகரையில் இருந்து கொச்சாவூருக்கு கொண்டு வருகிறார். அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்குகிறார்.

இதுபற்றி மகேஸ்வரி கூறும்போது, சத்துணவுடன் கூடிய பாத்திரத்தை தலையில் சுமந்து 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கொச்சாவூர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்குவது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கொச்சாவூர் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உணவு சமைப்பதற்காக சத்துணவு கூடம் அமைக்க வேண்டும், மேலும் பஸ் வசதியும் செய்ய வேண்டும், என்றனர். 

Next Story