விலை உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவர வேண்டும், அனைத்து தரப்பினரும் வலியுறுத்தல்
விலை உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலூர்,
நாட்டில் நிலவும் பிரச்சினைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மாறி விட்டது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவில் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக உள்ளது.
நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாய் 24 பைசா எனவும், டீசல் 75 ரூபாய் 19 பைசா எனவும் விலை உயர்ந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை காணப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சரக்கு சேவை வரிக்குள் (ஜி.எஸ்.டி.) பெட்ரோல், டீசல் விற்பனையை கொண்டு வர வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகன தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது. ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதை சார்ந்து 5 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. நாளுக்குநாள் தனியார் வாகனங்களின் பெருக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சுற்றுலா வாகன சவாரியும் குறைந்து வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக வாகன டிரைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் நீலகிரியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு காய்கறி மூட்டைகளை ஏற்றி செல்லும் சரக்கு லாரிகளின் கட்டணம் உயரும் அபாயம் உள்ளது. இதைத்தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என பொதுமக்கள் மனதில் கலக்கம் உண்டாகி வருகிறது. மேலும் பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாதாரண விவசாயிகளையும் கடுமையாக பாதிக்கும் சூழல் நிலவுகிறது. இவ்வாறு அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடலூர் வாகன டிரைவர் மகேந்திரன் கூறியதாவது:–
எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது தவறு. கடந்த காலங்களை போல் அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லை எனில் ஜி.எஸ்.டி. வரிக்குள் பெட்ரோல், டீசல் விற்பனையை கொண்டு வர வேண்டும். சுற்றுலா வாகன தொழிலில் மிகவும் மோசம் அடைந்து விட்டது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. சுற்றுலா வாகன தொழிலில் போதிய வருமானமும் கிடைப்பது இல்லை.
வீட்டு வாடகை, வாகன கடனுக்கான தவணை தொகை, குடும்ப செலவு, வாகன பராமரிப்பு என பல்வேறு செலவினங்களை கணக்கிடும் போது வருமானம் போதிய அளவு இல்லை. பெரும்பாலான டிரைவர்கள் கந்து வட்டிக்கடைக்காரர்களின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். நீலகிரியில் சுற்றுலா வாகன தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சொந்த உபயோகத்துக்கு வாங்கப்படும் வாகனங்கள் சுற்றுலா தொழிலுக்கு பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
லாரி டிரைவர்கள் அசோசியேசன்ஸ் தலைவர் கிங்ஸ்ராஜன் கூறியதாவது:–
பெட்ரோல், டீசல் விலையை ஒரு முறை உயர்த்தப்படுவது இல்லை. பைசா கணக்கில் அடிக்கடி உயர்த்தப்படுகிறது. இவ்வாறு பலமுறை உயர்த்தப்பட்டதால் இன்றைக்கு பெட்ரோல் ரூ.82–க்கும், டீசல் ரூ.75–க்கும் விற்கப்படுகிறது. லிட்டருக்கு ரூ.100 வரை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதனால் லாரி வாடகையையும் உயர்த்தும் நிலை வரும்.
சரக்கு லாரிகளின் காப்பீடு தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் இன்றைக்கு சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே சரக்கு லாரிகளின் வாடகை உயரும்போது அத்தியாவசிய பொருட்களின் விலையும் இன்னும் அதிகரிக்கும். நாடு முழுவதும் சரக்கு லாரிகள், சுற்றுலா வாகனம், ஆட்டோ, வாடகை கார்கள் என வாகன உரிமையாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும். இவ்வாறு அவர் அதிருப்தியுடன் கூறினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு குழு பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியம் கூறியதாவது:–
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பச்சை தேயிலையை கொண்டு செல்லும் சரக்கு லாரிகளின் வாடகை அதிகரிக்கும். தேயிலை தொழிற்சாலைகளில் மின்சாரம் இல்லாத சமயத்தில் ஜெனரேட்டர்கள் மூலம் அரவை எந்திரங்கள் இயங்கும். எண்ணெய் விலை உயர்வால் தேயிலை உற்பத்தி செலவு அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தும் போது உற்பத்தி செலவினங்கள் அதிகரிக்கிறது.
தனியார் வாகனங்களின் வாடகை கட்டணம் அதிகரிக்கும். ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்கள் மீது சுமத்தப்படுகிறது. குறிப்பிட்ட காலக்கெடு அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும். தினமும் விலை ஏறுவதால் இதை காரணம் காட்டி அத்தியாவசிய பொருட்களின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்த்தப்படுகிறது. இதை தவிர்க்க பெட்ரோல், டீசல் விலை நிர்ணய உரிமையை மத்திய அரசு தன் வசம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்களின் விலையும் கட்டுக்குள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.