காரை கடத்திச்சென்ற வடமாநில வாலிபரை போலீசார் விரட்டிப்பிடித்தனர்


காரை கடத்திச்சென்ற வடமாநில வாலிபரை போலீசார் விரட்டிப்பிடித்தனர்
x
தினத்தந்தி 5 Sept 2018 3:45 AM IST (Updated: 5 Sept 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கரணையில் சாலையில் நின்றிருந்த காரை கடத்திச்சென்ற வடமாநில வாலிபரை போலீசார் விரட்டிச்சென்று பிடித்தனர்.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது காரை ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவர் சிவக்குமார் என்பவர் ஓட்டி வருகிறார். நேற்று அதிகாலை பள்ளிக்கரணை-வேளச்சேரி சாலையில் காரை டிரைவர் நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். அப்போது திடீரென ஒருவர் அந்த காரை ஓட்டிச்சென்றதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து புறநகர் பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். குரோம்பேட்டை ரேடியல் சாலை அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, போலீஸ்காரர்கள் கமலக்கண்ணன், மனோகரன் ஆகியோர் அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் காரை ஓட்டி வந்தவர் போலீசாரை தள்ளிவிட்டு காரை வேகமாக ஓட்டிச் சென்றார்.

போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். தாம்பரம், இரும்புலியூர் பாலத்தின் அருகே போலீசார் சினிமா பாணியில் அந்த காரை சுற்றிவளைத்தனர். அப்போது காரில் இருந்தவரை வெளியே வருமாறு கூறியும் அவர் வரமறுத்தார். உடனே போலீசார் கார் கண்ணாடியை உடைத்து அந்த வாலிபரை வெளியே கொண்டுவந்தனர்.

பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், காரை கடத்திச் சென்றவர் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த அனுஸ்மான் லியோனல் சிங் (வயது 25) என தெரிந்தது. புனேயில் ஒரு கடல்சார் நிறுவனத்தில் புகைப்பட நிபுணராக பணியாற்றி வந்தார்.

அங்கு நண்பருடன் ஏற்பட்ட தகராறில் நேற்று அதிகாலை புனேயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, மடிப்பாக்கத்தில் உள்ள நண்பரை பார்க்க சென்றார். ஆனால் அந்த நண்பர் திருச்சிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியில் சாலையோரத்தில் நின்ற காரை எடுத்துக்கொண்டு சென்றதாக தெரியவந்தது.

போலீசார் விசாரணையின்போது அவர் அடிக்கடி அழுவதும், சிரிப்பதுமாக இருந்ததாகவும், மனஅழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது. அவருக்கு போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதி மன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

Next Story