பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.10 லட்சம் திருட்டு


பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.10 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 5 Sept 2018 4:30 AM IST (Updated: 5 Sept 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரியில் பட்டப்பகலில், மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.10 லட்சம் திருட்டு போனது. இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான 3 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேச்சேரி,

சேலம் இரும்பாலை மோகன் நகரில் வசித்து வருபவர் வெங்கடாசலம் (வயது 47). இவர் சேலம் ஸ்டீல் பிளாண்டில் சீனியர் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பரான மேச்சேரி எம்.காளிப்பட்டி பகுதியை சேர்ந்த காத்தமுத்து என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் கேட்டிருந்தார்.

இதையடுத்து நேற்று காலை மேச்சேரி - மேட்டூர் சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு இருவரும் சென்றனர். காத்தமுத்து வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்து வெங்கடாசலத்திடம் கொடுத்தார். பின்னர் இருவரும் வங்கி அருகில் உள்ள ஒரு கடைக்கு சென்று டீ குடித்தனர். இதையடுத்து காத்தமுத்து அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் வெங்கடாசலம், ரூ.10 லட்சத்தை ஒரு பையில் வைத்து, அதை மற்றொரு வயர் பையில் போட்டு மோட்டார் சைக்கிளில் மாட்டிக்கொண்டு சற்று தொலைவில் உள்ள சுப்பிரமணியன் நகருக்கு சென்றார்.

அங்கு இவருடைய நண்பரின் மாடி வீடு கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்த வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய வெங்கடாசலம், பின்னர் அந்த மாடி வீட்டுக்கு சென்று நடைபெற்று வந்த பணிகளை பார்வையிட்டு விட்டு 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் கீழே வந்து மோட்டார் சைக்கிளை பார்த்தபோது, அதில் மாட்டி இருந்த பணப்பையை காணவில்லை. ரூ.10 லட்சம் திருட்டு போனதை அறிந்த வெங்கடாசலம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து மேச்சேரி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.

இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் ஒருவரும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருவரும் அங்கு வந்ததும், அதில் இரண்டு பேர் வந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி வந்து வெங்கடாசலத்தின் மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை எடுத்ததும், பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து ரூ.10 லட்சத்தை திருடிச்சென்ற அந்த 3 பேர் யார்? அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? வெங்கடாசலத்தை வங்கியில் இருந்து கண்காணித்து, அவரை பின் தொடர்ந்து வந்து பணத்தை திருடிச் சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் துப்பு துலக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.10 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story