வெள்ளையனை நடுங்கவைத்த செந்தமிழ்ச் சிங்கம்


வெள்ளையனை நடுங்கவைத்த செந்தமிழ்ச் சிங்கம்
x
தினத்தந்தி 5 Sep 2018 5:30 AM GMT (Updated: 5 Sep 2018 5:30 AM GMT)

‘ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணி!’ என மகாகவி பாரதியால் உளம் நெகிழ்ந்து பாராட்டப்பட்ட தீரர் வ.உ.சிதம்பரம்.

இன்று (செப்டம்பர் 5-ந்தேதி) வ.உ.சி.யின் பிறந்த நாள்.

வ.உ.சிதம்பரம் வீரம் விளைந்த பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஓட்டப்பிடாரம் கிராமத்தில் 5-9-1872 அன்று, உலகநாதன்-பிரமாயி தம்பதிக்கு தவப் புதல்வராகப் பிறந்தார்.

புகழ்மிக்க வக்கீலாக திகழ்ந்த தன் தந்தையைப் போலவே வ.உ.சிதம்பரனாரும் வக்கீலாகவே வாழ்க்கையை தொடங்கினார். எனினும் தேச பக்தியும், விடுதலை வேட்கையும் வ.உ.சி.யை ஆற்றல்மிக்க சுதந்திரப் போராளியாக பரிணமிக்கச் செய்தது.

‘செங்கோலுக்கு முன் சங்கீதம் செல்லுமா?’ என அவர் தந்தை கேட்டபோது, ‘இது கொடுங்கோலுக்கு முன் புரட்சி கீதம் அப்பா’ என பதிலுரைத்தார் வ.உ.சிதம்பரம். வங்கத்தில் ஒலித்த வந்தே மாதரம் எனும் தாரக மந்திரச் சொல்லை தமிழகமெங்கும், விடுதலைப் போராட்டத்தின் போர் முழக்கமாகவே ஒலிக்கச் செய்த வ.உ.சி., பின்னாளில் ‘வந்தே மாதரம் பிள்ளை’ என அழைக்கப்பட்டார்.

‘சுதேசியம்’ என்பது சுதந்திரத்தின் திறவுகோல் என விளக்கமளித்த வ.உ.சி., ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி நாவாய்ச் சங்கம் எனும் பெயரில் கப்பல் கம்பெனியைத் தொடங்கி, ‘காலிபா’, ‘லாவோ’ என்ற இரு கப்பல்களை தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே இயக்கச் செய்தார்.

இதற்கு பெரிதும் உதவியாக இருந்த லோகமான்ய திலகர், ‘தென்நாட்டிலேயே மிகச்சிறந்த போராட்ட வீரர் வ.உ.சி. ஒருவர்தான்’ எனத் தன் சுயசரிதை நூலில் பாராட்டி எழுதியுள்ளார். வெள்ளையர் அரசுக்கு எதிராகப் பேசினாலே குற்றம் எனக் கருதப்பட்ட அந்நாளில் சுதேசி கப்பல் கம்பெனியைத் தொடங்கி, வெள்ளையருக்கு எதிராகக் கப்பலோட்டிய வ.உ.சி.யின் வீரத்தை அகிலமே வியந்து போற்றியது.

சுதேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுப்ரமணிய சிவா எனும் சுதந்திரப் போராளியுடன் இணைந்து, தூத்துக்குடியில் அந்நியத் துணிகளைத் தீவைத்து எரிக்கும் அறப்போரை 1905-ம் ஆண்டு வெற்றிகரமாக நடத்தினார் வ.உ.சி.

வெள்ளைக்கார முதலாளிகள் தூத்துக்குடியில் நடத்திய கோரல் மில் என்ற நூற்பாலை நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு வ.உ.சி. தலைமை தாங்கி, தொழிலாளர்கள் சார்பாக அன்றைய சப்-கலெக்டர் ஆஷ் துரையுடன் பேசினார். அச்சந்திப்பு சரித்திர சம்பவமாகும்.

ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக பேசிய ஆஷ் துரையிடம் வ.உ.சி., ‘ஐயா, ஏழைத் தொழிலாளர்கள் ஆலை நிர்வாகத்தில் அதிகாரம் கோரவில்லை. லாபத்தில் பங்கு கேட்கவில்லை. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மட்டுமே கேட்கின்றனர். அதையும் தரமறுக்கிறான் முதலாளி. அதற்குப் பரிந்து பேச வந்துவிட்டீர் அதிகாரி!’ என்றதும் ஆஷ்துரை மிகுந்த சினத்துடன் எழுந்து போய்விட்டார்.

இந்தியாவில் நடைபெற்ற தொழிலாளர் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, தொழிலாளர்களின் கோரிக்கையை வென்றெடுக்க வ.உ.சி. துணை நின்றார்.

வங்கத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவர் விபின் சந்திரபாலரின் விடுதலை திருநாளை திருநெல்வேலியில் சிறப்பாக நடத்த வ.உ.சி. ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் வெள்ளையர் அரசு அதற்கு அனுமதி மறுத்து, தடை உத்தரவு பிறப்பித்தது. தடை உத்தரவை மீறி வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் மாபெரும் பேரணி நடத்தினர்.

அப்போதைய திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச் துரை, வ.உ.சி.யை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். வ.உ.சி.-விஞ்ச் துரை சந்திப்பு விடுதலை போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கது.

‘சுதந்திரத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?’ என்று வ.உ.சி., சுப்ரமணிய சிவா இருவரையும் பார்த்து விஞ்ச் துரை கேட்டபோது, ‘யாரைப் பார்த்து இப்படி கேட்கிறீர்? உங்கள் இனத்தவர் (ஆங்கிலேயர்) காடுமேடுகளில் காட்டு மிராண்டிகளாகச் சுற்றித் திரிந்த காலத்தில், அரசியல் நெறி வகுத்து, ஆட்சித் திறன் புரிந்து, பாராண்ட பரம்பரையின் வீரப் புதல்வர்கள் நாங்கள்’ என வ.உ.சி., சுப்ரமணிய சிவா வீர கர்ஜனை புரிந்தபோது விஞ்ச் துரை வாயடைத்துப் போனார்.

வ.உ.சி., சுப்ரமணிய சிவா இருவர் மீதும் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, சுப்ரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், வ.உ.சி.க்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை சிறையில் வ.உ.சி. கல்லுடைத்து, செக்கிழுத்து சித்ரவதை அனுபவித்தார். அவர் சிறைத் தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்ததில் தண்டனைக்காலம் ஆறு ஆண்டுகளாகக் குறைந்தது. வ.உ.சி. 1912-ம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையாகி அரசியல் துறவறம் மேற்கொண்டார்.

அவர் சிறையில் இருந்தபோது, அவரது தந்தை காலமானார். 1921-ல் மகாகவி பாரதி அமரர் ஆன செய்தி கேட்டு மனம் துடித்தார். ‘நான் கண்ட பாரதி’ எனும் நூலில் பாரதியின் பெருமைகளை, நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

வ.உ.சி. மிகச்சிறந்த தமிழ் அறிஞராகவும் திகழ்ந்தார். 1935-ம் ஆண்டு சைவ சித்தாந்த நூலான சிவஞான போதம் எனும் நூலுக்கு அருமையான உரை எழுதி வெளியிட்டார். மணக்குடவர் எழுதிய திருக்குறள் உரையை வ.உ.சி. பதிப்பித்தார். மனம் போல வாழ்வு, மெய்யறம், வலிமைக்கு மார்க்கம் ஆகிய நூல்களை எழுதினார். தொல்காப்பியம், இளம்பூரணர் உரையை பதிப்பித்தார்.

தன் சுயசரிதையை கவிதை வடிவில் முதன்முதலில் எழுதியவர் வ.உ.சி.தான். செயற்கரிய செய்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. 1936-ம் ஆண்டு மறைந்தார்.

-திருவையாறு ரா.சிவகுமார்

Next Story