நாடு முழுவதும் ஒரே விலை கார் உற்பத்தி நிறுவனங்கள் முடிவு
நாடு முழுவதும் ஒரே விலையில் கார்களை விற்க, கார் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறை அதாவது சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்து ஓராண்டிற்கும் மேலாகிறது. ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதால் பல பொருட்களின் விலைகள் உயர்ந்தன. சில பொருட்களின் விலைகள் குறைந்தன. அந்த வகையில் நாடு முழுவதும் ஒரே விலையில் கார்களை விற்க, கார் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
பொதுவாக கார்களை அறிமுகப்படுத்தும்போது மும்பை விற்பனையக விலை, பெங்களூரு விற்பனையக விலை, டெல்லி விற்பனையக விலை, சென்னை விற்பனையக விலை என்று ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு விலையை நிர்ணயித்து, விற்பனை செய்யப்பட்டன. இவ்வாறு மாநிலத்திற்கு மாநிலம், வாகனங்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதற்கு, அந்தந்த மாநிலங்களின் வரி விதிப்பு விகிதங்களே முக்கிய காரணமாகின்றன. பொதுவாக டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் பிற மாநிலங்களைக் காட்டிலும் விலை குறைவாக இருக்கும்.
இப்போது நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளதால் கார்களுக்கான வரி விதிப்பில் பெரிய மாறுதல்கள் இல்லை. இதனால் நாடு முழுவதும் ஒரே விலையில் கார்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. இதன்படி இனி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாகனங்களை எங்கு வாங்கினாலும் ஒரே விலையாகதான் இருக்கும்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டொயோடா யாரிஸ், போர்டு பிரீஸ்டைல் ஆகிய கார்கள் நாடு முழுவதும் ஒரே விலையில் விற்கப்படுகின்றன. இதேபோல சொகுசு கார்களைத் தயாரிக்கும் மெர்சிடஸ் பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ. உள்ளிட்ட நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளின் விலையை நாடு முழுவதும் ஒரே அளவில் நிர்ணயித்துள்ளன.
இருந்தாலும் மாநிலங்கள் விதிக்கும் சாலை வரி, வாகன பதிவுக் கட்டணம் ஆகியவை ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். இதனால் விலையில் சிறிதளவு ஏற்ற, இறக்கங்கள் இருக்கலாம். ஆனால் முன்பு போல யூனியன் பிரதேசங்களில் விற்கப்படும் வாகனங்களுக்கும் மாநிலங்களில் விற்கப்படும் வாகனங்களுக்குமான விலையில் காணப்பட்ட பெருமளவு வித்தியாசம் நிச்சயம் தற்போது இருக்காது.
ஒரு நாடு, ஒரு விலை என்ற முயற்சியில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியே.
Related Tags :
Next Story