பயணத்தை இனிமையாக்கும் கியர்கள்


பயணத்தை இனிமையாக்கும் கியர்கள்
x
தினத்தந்தி 5 Sept 2018 1:01 PM IST (Updated: 5 Sept 2018 1:01 PM IST)
t-max-icont-min-icon

கார் பயணம் இனிமையாக இருக்க பல்வேறு அம்சங் கள் காரணமாக இருந்தாலும், வாகனத்தின் கியர் மிகவும் முக்கியமானது. கியர் மாற்றுவதில் உள்ள லாவகத் தன்மைதான் பயணத்தை இனிமையாக்கும்.

கார் நீடித்து உழைக்க கியரை சிரமமின்றி மாற்றி ஓட்டுவதும் முக்கியமானதாகும். நவீன கார்களில் இப்போது 5 கியர்களும் ஒரு ரிவர்ஸ் கியரும் இருக்கிறது. சில கார்களில் மட்டும் 6 கியர் மற்றும் ஒரு ரிவர்ஸ் கியர் இருக்கும். நீண்ட தொலைவு பயணத்தின்போது 6 கியர் கொண்ட கார்கள் பயன்படுத்துவதால் எரிபொருள் சிக்கனமாகும்.

பொதுவாக கியர் மாற்றும்போது ஆக்சிலரேட்டரிலிருந்து காலை எடுத்துவிட்டு, கிளட்ச் பெடலை அழுத்த வேண்டும். பிறகு இடது கை பகுதியில் உள்ள கியரை லாவகமாக மாற்ற வேண்டும். பிறகு கிளட்ச் பெடலை மெதுவாக விடுவித்து அதேசமயம் ஆக்சிலரேட்டரை மெதுவாக அழுத்த வாகனம் விரைந்து செல்லத் தொடங்கும். இதுதான் கியரை முறையாக பயன்படுத்தும் முறை.

பொதுவாக கியர்களை மாற்றும்போது ஓட்டுபவரின் கவனம் முழுவதும் சாலையில் மட்டும்தான் இருக்க வேண்டும். கியர் மாற்றும் போது சாலையிலிருந்து கவனத்தைத் திருப்பி கியர் லீவரைப் பார்த்து திருப்பக் கூடாது.

கார் என்ஜினின் சத்தமே நீங்கள் எப்போது கியர் மாற்ற வேண்டும் என்பதை அறிவுறுத்தும். இரண்டாவது அல்லது மூன்றாவது கியரில் இருக்கும்போது நீங்கள் ஆக்சிலரேட்டரை அழுத்தினால் என்ஜின் சத்தம் அதிகரிக்கும். அப்போதே நீங்கள் நான்காவது, ஐந்தாவது கியருக்கு மாற்றுவீர்கள்.

பொதுவாக 1, 2, 3 ஆகிய கியர்களில் கார் செல்லும்போது அதிகம் ஆக்சிலரேட்டரை அழுத்த வேண்டியிருக்கும். அதேசமயம் 4 மற்றும் 5 என கியர் மாற்றினால் ஆக்சிலரேட்டரை லேசாக அழுத்தினாலே வாகனம் வேகமாக பறக்கும்.

சாலையின் தன்மை, வாகன நெரிசல் ஆகியவற்றுக்கேற்ப கியர்களை தீர்மானிக்க வேண்டும்.

எப்போதும் கியரை லாவகமாக மாற்றுவதே சிறந்தது.

பொதுவாக கார் ஓட்டும்போது ஒரே சீரான நிலையில் கியரை மாற்ற முடியாது. சில சமயங்களில் தேவைப்பட்டால் திடீரென கியரை குறைக்க வேண்டும். 60 கி.மீ. வேகத்தில் செல்கிறீர்கள், திடீரென வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் 5-வது கியரில் இருந்து 3-வது கியருக்கு மாற்றலாம்.

காரின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றால் ஆக்சிலரேட்டரிலிருந்து காலை எடுத்தாலே காரின் வேகம் குறைந்துவிடும்.

எந்த கியரில் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்ற குழப்பம் பல சமயங்களில் சிலருக்கு ஏற்படும். நியூட்ரலில் இருந்து முதல் கியருக்கு மாற்றியவுடனேயே 10 கி.மீ. வேகத்தை கார் எட்டியவுடனேயே 2-வது கியரைப் போட வேண்டும். அடுத்து 20 கி.மீ. முதல் 25 கி.மீ. வேகத்தை எட்டும்போது 3-வது கியருக்கு மாறலாம். 35 கி.மீ. முதல் 40 கி.மீ. வேகத்தைத் தொடும்போது 4-வது கியருக்கு மாறியிருக்க வேண்டும். வாகன நெரிசல் மிகுந்த சாலைகளைப் பொறுத்து கியர் மாற்றும் விகிதம் அமைய வேண்டும்.

பொதுவாக உச்சபட்ச கியரான 5-வது கியரில் சென்று கொண்டிருக்கும்போது தவறுதலாக ரிவர்ஸ் கியர் விழுந்துவிடுமோ என்ற அச்சம் பலருக்கு ஏற்படும். ஆனால் முன்நோக்கி நகரும் போது ரிவர்ஸ் கியருக்கு மாற்றுவது கடினமானது. ஏனெனில் முன்நோக்கி செல்லும் போது, தவறுதலாக ரிவர்ஸ் கியருக்கு மாற்றி விடக்கூடாது என்பதற்காக பிரத்யேக ‘லாக்’ அமைப்பு இணைக்கப்பட்டிருக்கும். அதனால் ரிவர்ஸ் கியர் விழுந்துவிடுமோ என்று அச்சப்பட தேவையில்லை.

Next Story