டி.வி.எஸ். மோட்டார்ஸின் புது வரவு ‘ரேடியோன்’


டி.வி.எஸ். மோட்டார்ஸின் புது வரவு ‘ரேடியோன்’
x
தினத்தந்தி 5 Sept 2018 1:05 PM IST (Updated: 5 Sept 2018 1:05 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த வாரம் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘ரேடியோன்’ என்ற பெயரிலான இந்த மோட்டார் சைக்கிள் 110 சி.சி. திறன் கொண்டது. ஏற்கனவே இந்நிறுவனத்தின் டி.வி.எஸ். விக்டர் மற்றும் ஸ்டார் சிட்டி ஆகிய மோட்டார் சைக்கிளுடன் இப்புதிய மாடலும் சேர்ந்துள்ளது. எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த மாடலை டி.வி.எஸ். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய பீனிக்ஸ் மாடல் (125 சி.சி.) மோட்டார் சைக்கிளின் அடுத்த வடிவமாக இது தோற்றமளிக்கிறது. பீனிக்ஸ் மோட்டார் சைக்கிள் 2012-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்புதிய மோட்டார் சைக்கிள் 109.7 சி.சி. ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. இது ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் பயன்படுத்தப்படும் ரகமாகும். இது 8.3 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 7,000 ஆர்.பி.எம். திறனை வெளிப்படுத்தக் கூடியது. இதில் நான்கு கியர்கள் உள்ளன. இதன் பெட்ரோல் டேங்க் 10 லிட்டர் கொள்ளளவு கொண்டது. சோதனை ஓட்டத்தில் இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 69.3 கி.மீ. தூரம் ஓடியது. இதனால் அதிகரித்துவரும் பெட்ரோல் விலையை இந்த மாடல் மிக சுலபமாக சமாளிக்கும் என கருதுகிறார்கள். இதன் விலை ரூ. 48,400. இரண்டாம் நிலை நகரங்கள், கிராமப் பகுதிகளை மையமாகக் கொண்டு 25 வயது முதல் 35 வயதுப் பிரிவினரை இலக்காகக் கொண்டு இந்த மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

என்ஜின், ரிம் உள்ளிட்டவை கருப்பு நிறத்திலும், கியர் லிவர் தங்க நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கார்களில் உள்ளதைப் போன்று ஸ்பீடா மீட்டர் உள்ளது. இதன் டேங்க் தோற்றம் கம்பீரமான வாகனம் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது. மேலும் டேங்கை ஒட்டி ரப்பர் பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பதால், வாகன ஓட்டிகள் சவுகரியமாக உணரமுடியும். அத்துடன் ஸ்மார்ட்போன் சார்ஜரும் இதில் உள்ளது. மேலும் இருக்கைகள் அகலமாக இருப்பது சவுகரியமான பயணத்தை உறுதி செய்கிறது. மேலும்அலாய் சக்கரத்தைக் கொண்டிருப்பது சிறப்பாகும்.

Next Story