பேட்டரி கார் வாங்குங்கள்; ரூ. 1.4 லட்சம் மானியம் பெறுங்கள்


பேட்டரி கார் வாங்குங்கள்; ரூ. 1.4 லட்சம் மானியம் பெறுங்கள்
x
தினத்தந்தி 5 Sep 2018 9:22 AM GMT (Updated: 5 Sep 2018 9:22 AM GMT)

பேட்டரி வாகனங்களின் உபயோகத்தை அதிகரிக்கும் நோக்கில், விலை அதிகமான பேட்டரி வாகனங்களுக்கு மானிய உதவி அளிக்கவும் மத்திய அரசு முன்வந்திருக்கிறது.

கார் வைத்திருப்பவர்களுக்கு மிக வும் கவலை தரும் ஒரே விஷயம் அன்றாடம் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலைதான். முன்பெல்லாம் தங்கத்தின் விலைதான் அன்றாடம் மாறுபடும். இப்போது பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாறுகின்றன.

சர்வதேச விலைக்கேற்ப விலை உயர்ந்தால் உயரும் என்றும் குறைந்தால் குறைக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. ஆனால் இதுவரையில் பெட்ரோல் விலை உயர்ந்ததே தவிர, விலை குறைந்தது மிக மிக அரிதான நிகழ்வே.

அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் மத்திய அரசின் அன்னியச் செலாவணி கையிருப்பு கரைந்து வருகிறது. இதனால் ஏற்படும் வர்த்தகப் பற்றாக்குறையை சமாளிக்க அரசு நீண்ட கால அடிப்படையில் உத்தேசித்ததுதான் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள்.

பேட்டரி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், அன்னியச் செலாவணி குறைவதோடு, டீசல்-பெட்ரோல் வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசைக் கட்டுப்படுத்த முடியும். அதனால் மத்திய அரசு பேட்டரி வாகன தயாரிப்பையும், பயன்பாட்டையும் துரிதப்படுத்தி வருகிறது. இந்தியா மட்டுமின்றி, வெளி நாடுகளும் பேட்டரி வாகனங்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றன.

2030-ம் ஆண்டில் அனைத்து வாகனங்களையும் பேட்டரியில் இயங்கச் செய்யும் நோக்கில் திட்டமிட்டு அந்த இலக்கு நோக்கிய பயணத்தை மத்திய அரசு படிப்படியாக செயல்படுத்தி வருகிறது.

இந்த வகையில் பேட்டரி வாகனங்களின் உபயோகத்தை அதிகரிக்கும் நோக்கில், விலை அதிகமான பேட்டரி வாகனங்களுக்கு மானிய உதவி அளிக்கவும் மத்திய அரசு முன்வந்திருக்கிறது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, பேட்டரி வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினர். குறுகிய கால திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட மானிய திட்டம், பின்னர் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது. தற்போது இம் மாதத்துடன் இத்திட்டம் முடிகிறது. இதைக் கருத்தில் கொண்டே இரண்டாவது கட்டத்தையும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் இம்மாதம் 7-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதன்படி பேட்டரி வாகனங்களுக்கான மானியத்தை வாடிக் கையாளர்களுக்கு நேரடியாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இத்திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு செயல் படுத்தப்பட உள்ளனர். அதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் மானிய உதவியுடன் பேட்டரி வாகனங் களை வாங்கலாம். இதற்காக ரூ.5,500 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதன்படி பேட்டரி கார்களுக்கு ரூ.1.40 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். கார்களுக்கு மட்டுமின்றி மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோக்களுக்கு மானியம் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இது தவிர உயர்தர பேட்டரி கார் களுக்கு ரூ.4 லட்சம் வரை, மானியம் வழங்கவும் முடிவு செய்துள்ளனர். தற்போது பேட்டரியில் இயங்கும் கார் களை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த காரின் விலையில் அதிகபட்சம் 20 சதவீதம் அல்லது ரூ. 1.4 லட்சம் வரை மானியம் அளிக்க முடிவு செய்துள்ளன.

பேட்டரி வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு கொண்டு வந்த ‘பேம்1’ திட்டத்துக்கு முன்னர் ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது இதைவிட 8 மடங்கு தொகை கூடுதலாக ‘பேம் 2’ திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலில் எலக்ட்ரிக் சார்ஜிங் மையம் அமைக்க முதலீடு செய்வது என்றும், பேட்டரி வாகனங்களுக்கு மானியம் வழங்குவதென்றும் முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அரசு பஸ்களுக்கு மட்டும் மானியம் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிலோவாட் பேட்டரி வாகனத்திற்கு ரூ.10 ஆயிரம் வீதம் மானியம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது செயல்படும் பேட்டரி கார்கள் 14 கிலோவாட் திறன் கொண்டவை. இதனால் இவற்றுக்கு ரூ.1.40 லட்சம் மானியம் கிடைக்கும்.

அரசு நேரடியாக மானியம் அளிப்பதால் பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும்.

இதுவரையில் பேட்டரி வாகன தயாரிப்பு குறித்து குழப்பமான சூழல் நிலவியதால் பேட்டரி வாகனங்களைத் தயாரிப்பதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வந்தன. தற்போது அரசு தெளிவாக அறிவித்துவிட்டதால் பல நிறுவனங்கள் பேட்டரி வாகன தயாரிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story