மும்பை தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பதிவு திடீர் நிறுத்தம் பயணிகள் அவதி


மும்பை தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பதிவு திடீர் நிறுத்தம் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 5 Sept 2018 3:23 PM IST (Updated: 5 Sept 2018 3:23 PM IST)
t-max-icont-min-icon

மும்பை தாதர்-நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு திடீரென்று நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

நெல்லை, 

மும்பை தாதர்-நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு திடீரென்று நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

முன்பதிவு நிறுத்தம்

நெல்லையில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பை அருகில் உள்ள தாதர் நகருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (22629) தாதர் நகரில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நெல்லைக்கு வந்து சேரும்.

இந்த ரெயிலுக்கான முன்பதிவு மட்டும் கடந்த சில நாட்களாக திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் வரக்கூடிய கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விடுமுறை நாட்களுக்கு ஊருக்கு வருவோர் மற்றும் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இந்த ரெயில் ரத்து செய்யப்படுமோ? என்ற சந்தேகமும் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

மாற்று நடவடிக்கை

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, தாதர்-நெல்லை ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறினர்.

அதாவது நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை காலை 7.20 மணிக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு தாதர் சென்றடைகிறது. அதன்பிறகு வெள்ளிக்கிழமை இரவு வரை இந்த ரெயில் பெட்டிகள் தாதர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் வியாழக்கிழமை இரவே தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டு, டெல்லி ரெயில்வே வாரியத்திடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறது. எனவே அதுவரை முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயிலை நிறுத்தும் திட்டம் எதுவும் கிடையாது என்று அதிகாரிகள் கூறினர்.

பயணிகள் கோரிக்கை

இதுதொடர்பாக மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் நெல்லையை சேர்ந்த அப்பாதுரை கூறுகையில், “நெல்லை- மும்பை தாதர் வாராந்திர அதிவிரைவு ரெயில் மிகவும் பயனுள்ள ரெயில் ஆகும். இந்த ரெயில் மதுரை, கரூர், ஈரோடு, கோவை வழியாகவும், தொடர்ந்து கொங்கன் ரெயில்வே வழித்தடத்தில் தற்போது இயக்கப்படுகிறது. இதை தவிர்த்து மதுரையில் இருந்து திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக இயக்கினால் பயண நேரம் மேலும் குறையும். இதன்மூலம் இந்த ரெயிலை வாரத்தில் 2 நாட்கள் இயக்க முடியும். எனவே அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் ரெயிலை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

Next Story