தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள், மாணவ–மாணவிகள் பார்வையிட்டனர்
தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்தநாளையொட்டி வ.உ.சி.துறைமுகத்தை பொதுமக்கள், மாணவ–மாணவிகள் கண்டு ரசித்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்தநாளையொட்டி வ.உ.சி.துறைமுகத்தை பொதுமக்கள், மாணவ–மாணவிகள் கண்டு ரசித்தனர்.
பிறந்தநாள் விழாதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் உள்ள அவருடைய உருவ சிலைக்கு துறைமுக பொறுப்புக்கழக நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி சாந்தி தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் மணிவண்ணன், இந்திய கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வ.உ.சி. பிறந்தநாளையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.
விழாவில் துறைமுக ஊழியர்கள், மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
துறைமுகத்தை பார்வையிட அனுமதிவ.உ.சி. பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ–மாணவிகள் பஸ், கார் மற்றும் ஏராளமான வாகனங்களில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தனர். அவர்கள் துறைமுக வாயிலில் உரிய சோதனைக்கு பிறகு பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் துறைமுகத்தில் கப்பல்களில் சரக்குகளை ஏற்றி, இறக்குவதை பார்வையிட்டு ரசித்தனர். சிறுவர்கள் ஆர்வத்துடன் கப்பல்களிலும் ஏறி பார்வையிட்டனர்.
இது குறித்து துறைமுகத்தை பார்வையிட்ட மாணவன் கூறும் போது, ‘துறைமுகத்தில் கப்பல்களை பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது. இது போன்ற வாய்ப்பை துறைமுகம் வழங்கி இருப்பது சிறப்பானது. கப்பல்களில் இருந்து ராட்சத எந்திரங்கள் மூலம் சரக்குகள் இறக்கப்படுவது வியப்பாக உள்ளது. கப்பல்களை அருகில் இருந்து பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது’ என்று கூறினார்.