கால்வாய் கரையில் அரசு பஸ்– சரக்குவேன் நேருக்குநேர் மோதல்: விவசாய தொழிலாளர்கள் 19 பேர் படுகாயம்
கள்ளந்திரி அருகே கால்வாய் கரையில் அரசு பஸ்சும் சரக்குவேனும் நேருக்குநேர் மோதின. இதில் விவசாய தொழிலாளர்கள் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
கள்ளந்திரி,
கள்ளிந்திரி அருகே கிடாரிப்பட்டியில் இருந்து மாங்குளம் செல்ல பெரியாறு பிரதான பாசன கால்வாய் கரையில் சாலை உள்ளது. இந்த சாலையில் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் வகையில் குறுகிய சாலையாக இருப்பதாலும், வளைவுகளும் முட்புதர்களுமாக காட்சி அளிப்பதால் எதிரே வரும் வாகனக்கள் தெரியாத நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.
இந்நிலையில் மேலூரில் இருந்து மாங்குளம் வழியாக அழகர்கோவிலுக்கு பயணிகளுடன் அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. கிடாரிப்பட்டி கால்வாய் கரையில் சென்றபோது எதிரே வள்ளாளபட்டியில் இருந்து விவசாய பணிக்காக தொழிலாளர்களை ஏற்றி வந்த சரக்குவேனும் அரசு பஸ்சும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் வள்ளாளபட்டியை சேர்ந்த அய்யம்மாள்(வயது35), பொன்னழகு(22), சொர்ணம்(20), நாச்சி ஆகிய பெண்கள் உள்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர். அலறல் ச த்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். பின்னர் 2 ஆம்புலன்ஸ்களில் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நல்லவேளையாக விபத்தில் சிக்கிய வாகனங்கள் கால்வாய் தண்ணீருக்குள் பாய்ந்துவிடாமல் நின்றதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்தப்பினர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதே இடத்தில் கடந்த ஆண்டு தனியார் பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்து சிறுவர், சிறுமிகள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆபத்தான இந்த சாலையை அகலப்படுத்தவேண்டும். முட்புதர்களை அகற்றவேண்டும் என்று பொதுமக்கள்கோரிக்கை வி டுத்துள்ளனர்.