பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்


பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Sept 2018 3:00 AM IST (Updated: 5 Sept 2018 8:36 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

தென்காசி, 

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க கூட்டம் 

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில குழு கூட்டம் குற்றாலத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில பொது செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் எம்.பி. லிங்கம், வக்கீல் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பிறகு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

கண்டனம் 

பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் வந்தபோது சோபியா என்ற மாணவி பா.ஜ.க.விற்கு எதிராக கோ‌ஷமிட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மாநில தலைவராக இருப்பவருக்கு சகிப்புத்தன்மை வேண்டும். தமிழிசை சவுந்தரராஜன் செயல்பட்ட விதத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் அனைத்து மட்டத்திலும் ஊழல் நிறைந்துள்ளது. அமைச்சர்கள் மீதே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். இல்லையென்றால் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். போலீஸ் டி.ஜி.பி. மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

போராட்டம் 

மத்திய அரசு, தமிழகத்திற்கு எதிராக பல்வேறு திட்டங்களில் செயல்படுகிறது. காவிரி பிரச்சினை, நீட் தேர்வு, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் போன்றவை தமிழகத்திற்கு செய்யும் துரோகம் ஆகும். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மாநில அரசு இதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மிக கடுமையான போராட்டத்தில் ஈடுபடும்.

பெட்ரோல், டீசல் விலை தங்கத்தின் விலை போன்று உயர்ந்து வருகிறது. இதற்கு கூறும் காரணங்கள் சரியானது அல்ல. இந்த விலை உயர்வுக்கு காரணம் மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பு தான். இந்த வரியை பெருமளவு குறைக்க வேண்டும். அவ்வாறு குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்து விடும். இல்லையென்றால், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மேன்மேலும் துன்பத்திற்கு ஆளாவார்கள்.

மேகதாது அணை 

மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்கிறது. இதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மோசமான நடவடிக்கைகள் குறித்து வருகிற செப்டம்பர் மாதம் 17–ந் தேதி வேதாரண்யம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து விளக்கி கூற இருக்கிறோம். இந்த 6 இடங்களில் இருந்து ஒன்று சேர்ந்து வருகிற 23–ந் தேதி திருப்பூரில் பொதுக்கூட்டம் நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story