திருச்சியில் பெண் காவலர் பணிக்கான உடற் தகுதி தேர்வு 784 பேர் பங்கேற்பு


திருச்சியில் பெண் காவலர் பணிக்கான உடற் தகுதி தேர்வு 784 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Sept 2018 4:30 AM IST (Updated: 6 Sept 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் நடந்த பெண் காவலர் பணிக்கான உடற் தகுதி தேர்வில் 784 பேர் பங்கேற்றனர்.

திருச்சி,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழகம் முழுவதும் 2-ம் நிலை (ஆண், பெண்) காவலர், சிறை வார்டன், தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2-ம் கட்டமாக உடற்கூறு அளத்தல் மற்றும் உடற் தகுதி தேர்வு திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 3-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்று வருகிறார்கள். 2 நாட்கள் ஆண்களுக்கு நடந்த உடற் தகுதி தேர்வில் 1,140 பேர் தகுதி பெற்றனர்.

நேற்று பெண்களுக்கான உடற்கூறு அளத்தல்(உயரம் மற்றும் எடை) மற்றும் 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது. 400 மீட்டர் ஓட்டத்தை 2 நிமிடம் 30 வினாடிகளுக்குள் ஓடி முடிக்க வேண்டும். இதில் 784 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் தேர்ச்சி பெறும் பெண்களுக்கு அடுத்தக்கட்டமாக 8-ந் தேதி உடற்திறன் தேர்வு நடக்கிறது.

ஆண்களுக்கு 10-ந் தேதி உடற்திறன் தேர்வு நடக்கிறது. அதன்பிறகு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். உடற் தகுதி தேர்வினை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், டி.ஐ.ஜி.லலிதாலெட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Next Story