வங்கி கடன் பெற்றுத்தருவதாக ரூ.2 கோடி மோசடி: என்ஜினீயரிங் பட்டதாரி கைது


வங்கி கடன் பெற்றுத்தருவதாக ரூ.2 கோடி மோசடி: என்ஜினீயரிங் பட்டதாரி கைது
x
தினத்தந்தி 6 Sept 2018 5:30 AM IST (Updated: 6 Sept 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வங்கிக் கடன் பெற்றுத்தருவதாக கூறி நூற்றுக்கணக்கானவர்களிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்த என்ஜினீயரிங் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகிறார்கள்.

அடையாறு,

சென்னை, மயிலாப்பூரை சேர்ந்தவர் பெர்னார்ட் (வயது 51) என்பவரை கடந்த மாதம் செல்போனில் தொடர்புகொண்ட ஒருவர், தான் பிரபல தனியார் வங்கியின் சார்பில் பேசுவதாகவும், உங்களுக்கு வங்கிக் கடன் வாங்கித்தருகிறேன் என்றும் கூறினார். குறைந்த வட்டியில், எந்தவித உத்தரவாதமும் அளிக்காமல் உடனடியாக கடன் பெற்றுத்தருவதாக ஆசைகாட்டினார்.

இதை உண்மை என நம்பிய பெர்னார்ட், ரூ.10 லட்சம் கடன் வேண்டும் எனக் கூறினார். உடனே அவரது பான் கார்டு எண், முகவரி சான்று ஆகிய விவரங்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இதுவிஷயமாக சில தடவை செல்போனில் பேசிய அவர், கடன் தொகையை பெற உங்கள் பெயரில் ஒரு இன்சூரன்ஸ் மட்டும் போட்டால் போதும், கடன் தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறினார்.

இதற்காக மயிலாப்பூர் கரூர் வைஸ்யா வங்கியில் உள்ள ஒரு கணக்கு எண்ணில் பணம் செலுத்தும்படி கூறினார். இதனை நம்பிய பெர்னார்ட் கடந்த மாதம் 27-ந் தேதி அந்த வங்கி கணக்கில் ரூ.80 ஆயிரம் செலுத்தினார். மறுநாள் அவர் அந்த நபருடன் செல்போனில் பேச முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதேபோன்று, திருவல்லிக்கேணியை சேர்ந்த அப்துல் ரவுப் (42) என்பவரும் ஏமாற்றப்பட்டு, இதே வங்கி கணக்கில் ரூ.30 ஆயிரம் செலுத்தியுள்ளார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் மயிலாப்பூர் கரூர் வைஸ்யா வங்கி கிளையில் சென்று விசாரித்தபோது, சரியான தகவல் கிடைக்கவில்லை என தெரிகிறது. பின்னர் இருவரும் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மயிலாப்பூர் உதவி கமிஷனர் விஸ்வேஸ்வரய்யா உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அகஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

போலீசார் முதலில் வங்கியில் சென்று விசாரித்ததில், அந்த குறிப்பிட்ட வங்கி கணக்கில் இருந்து தினமும் ஒரு நபர் பணம் எடுப்பது தெரியவந்தது. போலீசார் நேற்று மாறுவேடத்தில் வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் போல் காத்திருந்து அந்த வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வந்த நபரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. பிடிபட்டவர் ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்த பி.டெக் பட்டதாரி குமரேசன் (28) என்பது தெரியவந்தது. அவர் ஈரோட்டில் சில ஆண்டுகள் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.

பிறகு 2017-ம் ஆண்டு ‘பிரி லைப் அட்வைசர்’ என்ற பெயரில் சொந்தமாக ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்சி நிறுவனம் தொடங்கி 10 பேரை வேலைக்கு சேர்த்தார். அந்த நிறுவனம் மூலம் பல தனியார் நிதி நிறுவனங்கள் பெயரைச் சொல்லி பலரை ஏமாற்றி பணமோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து ஒரு தனியார் நிதி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் ஈரோடு போலீசார் குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த குமரேசன் தனது பழைய நண்பரான திருச்சியை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் போனில் பேசினார். அப்போது விக்னேஷ், சென்னை வந்தால் புதிதாக தொழில் தொடங்கலாம் என்றார்.

அதன்படி சென்னையில் விக்னேஷ் தலைமையில் குமரேசன், ஆவடியை சேர்ந்த திருமூர்த்தி (40), மந்தைவெளியை சேர்ந்த குமரவேல் (30), கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பை சேர்ந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகன் வெங்கடேஷ் (35), கடலூரை சேர்ந்த சாமிநாதன் (24) ஆகியோர் இணைந்து ‘அல்ட்ரா டென்ஸ்’, ‘பாரத் பிரின்ஸ் சென்டர்’, ‘பார்கன் எண்டர்பிரைசஸ்’ என்ற பெயர்களில் நிறுவனங்களை தொடங்கினர்.

சென்னை தியாகராயநகர் மண்ணார் தெருவிலும், ஆவடி செக்போஸ்ட் அருகிலும் அலுவலகம் திறந்து சுமார் 30 பேரை ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பணியாளர்கள் யாருக்கும் மோசடி பற்றி சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டனர். மோசடி பணத்தை விக்னேஷிடம் கொடுத்ததும் அவர் மற்ற 5 பேருக்கும் பிரித்துக் கொடுப்பார்.

செல்போன் எண்களை ரேண்டமாக தேர்ந்தெடுத்து போன் செய்து வங்கி கடன் வேண்டுமா? என கேட்டு, கடன் தேவை என்பவர்களுடன் இந்த 6 பேரில் யாராவது ஒருவர் பேசி ஆசைகாட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்காக பல போலியான ஆவணங்கள், முத்திரைகளையும் செய்து வைத்துள்ளனர்.

இதற்காக பிரபல செல்போன் நிறுவனத்தின், முதல் 3 மாதங்களுக்கு முகவரி சான்று இல்லாமலே இலவசமாக பேசலாம் என்ற சேவையை பயன்படுத்தி சிம்கார்டுகள் வாங்கியுள்ளனர். இந்த கும்பல் நூற்றுக்கணக்கானவர்களிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.

இந்த போலி நிறுவனங்களின் பெயரில் பல்வேறு வங்கிகளில் இருந்த 14 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினர். தொடர்ந்து போலீசார் இந்த கும்பலின் தலைவன் விக்னேஷ் மற்றும் திருமூர்த்தி, குமரவேல், வெங்கடேசன், சாமிநாதன் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.

கைதான குமரேசனிடம் இருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், 20 செல்போன்கள், சிம்கார்டுகள், போலி முத்திரைகள், விசிட்டிங் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். குமரேசனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொதுமக்கள் இதுபோன்று தொலைபேசியில் கடன் வாங்கித்தருவதாக வரும் அழைப்புகளை நம்பி எந்தவகையிலும் பணத்தை இழக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் கூறியுள்ளனர்.

Next Story