காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 6 Sept 2018 4:30 AM IST (Updated: 6 Sept 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் மனம் உடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

வெள்ளியணை,

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள ஜோதிவடத்தை சேர்ந்த வெங்கட்-அலமேலு தம்பதியரின் மகன் பிரகாஷ்(வயது 19). இவர், கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்தார். அப்போது தன்னுடன் படித்த திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஒரு பெண்ணை காதலித்தார். அந்த சமயத்தில் அந்த பெண்ணின் பெற்றோர், மணப்பாறையில் இருந்து உப்பிடமங்கலம் பகுதிக்கு குடும்பத்துடன் வந்து தங்கி விவசாய கூலி வேலை செய்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. அவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், பிரகாஷ் படிக்காமல் வீட்டில் இருப்பதாலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவர்களை கண்டித்து பிரித்து வைத்தனர். ஆனால், காதலியை மறக்க முடியாமல் பிரகாஷ் தவித்து வந்தார்.

இதனை அறிந்த, அந்த பெண்ணின் உறவினர்களான மணப்பாறை பகுதியை சேர்ந்த சதீஷ், ஆனந்த் ஆகிய இருவரும் பிரகாசை சந்தித்து காதலுக்கு தாங்கள் உதவி செய்வதாகவும், இருவருக்கும் திருமணத்தை தாங்கள் நடத்தி வைப்பதாக உறுதி அளித்ததுடன், அதற்கு தங்களுக்கு பணம் தரவேண்டும் என கூறி, பிரகாசிடம் இருந்து அவ்வப்போது பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷிடம் இருந்து அழைப்பு வரவே, தன் நண்பர் நவராசுடன் மணப்பாறைக்கு சென்ற பிரகாஷ் அங்கு சதீஷ் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், மனம் உடைந்த பிரகாஷ் சோகத்துடன் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் விரைந்து வந்து பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று கரூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் முன்பு பிரகாசின் உறவினர்கள் கூடினர். பின்னர் அங்குள்ள வடக்கு பிரதட்சணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பிரகாஷ், இறப்பதற்கு முன்னதாக சதீஷிடம் தான் கடைசியாக செல்போனில் பேசியிருக்கிறார். அதன் பிறகு தான், தற்கொலை முடிவை எடுத்து இருக்கிறார். எனவே, இதில் சம்பந்தப்பட்ட சதீஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா மற்றும் போலீசார் அங்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பிரகாஷின் அண்ணன் மணிகண்டன், தனது தம்பியை ஏமாற்றி பணம் பறித்து தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளியணை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருமண ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பணம் பறித்ததுடன், தகாத வார்த்தையால் திட்டி தற்கொலைக்கு தூண்டியதாக சதீஷ், ஆனந்த் மற்றும் பிரகாசின் காதலி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story