பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்


பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2018 9:30 PM GMT (Updated: 5 Sep 2018 7:53 PM GMT)

ராமநத்தம் அருகே கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி பள்ளிக்கு பூட்டுபோட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநத்தம், 

ராமநத்தம் அருகே ம.புடையூரில் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 92 மாணவர்களும், 118 மாணவிகளும் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. உயர்நிலை பள்ளிக்கு 5 ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

இப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன்காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. எனவே பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி பள்ளிக்கூடத்தின் நுழைவு வாயில் கதவை பூட்டுபோட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களின் பெற்றோர், இந்த பள்ளிக்கூடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மேலும் மொழிப்பாடத்திற்கு கூட போதிய ஆசிரியர்கள் இல்லை. இதனால் எங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக அவர்களுக்கு முறையாக பாடம் நடத்துவதில்லை. எனவே இந்த பள்ளிக்கூடத்தில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

பின்னர் போலீசார் மாணவர்களையும் பெற்றோர்களையும் சமாதானப்படுத்த முயன்றனர். இதை ஏற்காத மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து வீட்டுக்கு சென்றனர். தொடர்ந்து பெற்றோர்களும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் செல்வக்குமார் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கூடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆசிரியர் தினத்தன்று கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story