வேப்பந்தட்டை-குன்னம் தாலுகாவில் ரூ.4 கோடியில் ஏரிகள் சீரமைக்கும் பணி கலெக்டர் சாந்தா ஆய்வு


வேப்பந்தட்டை-குன்னம் தாலுகாவில் ரூ.4 கோடியில் ஏரிகள் சீரமைக்கும் பணி கலெக்டர் சாந்தா ஆய்வு
x
தினத்தந்தி 5 Sep 2018 10:45 PM GMT (Updated: 5 Sep 2018 7:57 PM GMT)

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, குன்னம் தாலுகாவில் ரூ.4 கோடியில் ஏரிகள் சீரமைக்கும் பணிகளை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்,

பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதார துறையின் மூலம் கீழ் வெள்ளாறு உபவடி நிலத் திட்டத்தின் கீழ் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மற்றும் குன்னம் தாலுகாவில் உள்ள 6 ஏரிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வேப்பந்தட்டை மற்றும் குன்னம் தாலுகாவில் உள்ள ஓகளூர், அத்தியூர் ஏரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைக்கும் பணிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வேப்பந்தட்டை தாலுகாவில் பேரையூர் ஏரி, குன்னம் தாலுகாவில் கீரனூர், பெண்ணக்கோனம், ஓகளூர், அத்தியூர் மற்றும் அகரம்சீகூர் உள்ளிட்ட 6 ஏரிகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வெள்ளாற்றின் வலதுபுற கரையில் தொழுதூர் ரெகுலேட்டருக்கு மேல்புறத்தில் 2 ஏரிகளும் கீழ்புறத்தில் நான்கு ஏரிகளும் அமைந்துள்ளது.

நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மேற்காணும் ஏரிகளில் 18,409.98 மீட்டர் நீளமுள்ள கரைகள் பலப்படுத்தப்படுத்தும் பணிகளும், 24,700 மீட்டர் நீளமுள்ள வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளும், 29 எண்ணிக்கையிலான மதகு மற்றும் 8 எண்ணிக்கையிலான கலிங்குகளிலும் சீரமைப்பு பணிகள் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் 60 சதவீதம் முடிவுற்று, மீதமுள்ள பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் மழைக்காலத்திற்கு முன்பாகவே இக்கட்டுமானப்பணிகளை முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரத்தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் சுமார் 985.22 எக்டேர் நிலங்கள் நேரடியாகவும், 200 எக்டேர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுவதுடன், நிலத்தடி நீர் உயரவும் கால்நடைகள் பயன்பாட்டிற்கும் சுற்றுப்புறம் செழிக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மருதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி, மருதையாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், குன்னம் தாசில்தார் சிவா, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் மற்றும் உதவி பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல்களின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். அப்போது ஆலத்தூர் தாசில்தார் ஷாஜஹான், சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story