திண்டுக்கல்-நத்தம் சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


திண்டுக்கல்-நத்தம் சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Sept 2018 3:30 AM IST (Updated: 6 Sept 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்-நத்தம் சாலையில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல், 


திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 32-வது வார்டில் அனுமந்த நகர், புதுத்தெரு, ஜான்பிரிட்டோ தெரு ஆகிய குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில், ஜிக்கா திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. இதையடுத்து, 6 முறை குடிநீரை திறந்துவிட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பல வீடுகளுக்கு குடிநீர் சரியாக வரவில்லை.

இதனால், முறையாக குழாய்களை பதித்துவிட்டு குடிநீரை திறந்து விட வேண்டும். அதுவரை, பழைய குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால், புதிய குழாய்கள் மூலமே குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்காரணமாக கடந்த 1 மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, சோதனை ஓட்டம் நிறைவடைந்ததை அடுத்து நேற்று புதிய குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால், பல வீடுகளுக்கு குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள குடகனாறு இல்லம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், மாநகராட்சி உதவி பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பழைய குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதே போல் நத்தம் அருகே உள்ள ஆவிச்சிபட்டியில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதானதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை நத்தம்-சிறுகுடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story