சேலம் ஓட்டல் அதிபர் கொலையில் மாயமான நண்பர் திடீர் சரண்


சேலம் ஓட்டல் அதிபர் கொலையில் மாயமான நண்பர் திடீர் சரண்
x
தினத்தந்தி 6 Sept 2018 3:30 AM IST (Updated: 6 Sept 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

கூலிப்படை தலைவன் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதால் ஓட்டல் அதிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரண் அடைந்த அவருடைய நண்பர் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 பேரை கொலை செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம்,


சேலம் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 49). இவர் வீட்டின் கீழ் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த மாதம் 14-ந் தேதி இரவு வீட்டில் இருந்து இவர் திடீரென மாயமானார். இது தொடர்பாக கோபியின் தாய் சம்பூரணம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி திருச்சி மாவட்டம் முசிறி காவிரி கரையோரம் உடலில் காயங்களுடன் கோபி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து அங்குள்ள போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கோபி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே கோபியின் உடலை அனாதை பிணம் என கருதி 2 நாட்களில் அங்குள்ள போலீசார் அடக்கம் செய்து விட்டனர். இது சேலம் அம்மாபேட்டை போலீசாருக்கு தெரியவரவே அவர்கள் கோபி பிணமாக கிடந்தபோது எடுத்த போட்டோவை வைத்து உறவினர்களிடம் விசாரித்து, முசிறியில் பிணமாக கிடந்தது கோபிதான் என்பதை உறுதி செய்தனர்.

மேலும் கோபி மாயமான நாளில் அவருடைய நண்பர் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பெரியகவுண்டாபுரம் பகுதியை சேர்ந்த திருமணிகண்டன் (36) என்பவரையும் காணவில்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாகவும் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலை சம்பவம் நடந்த அன்று 2 பேரும் காரில் சென்றுள்ளனர். ஆனால் கோபி மட்டும் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். காருடன் மாயமான திருமணிகண்டன் என்ன ஆனார் என்பது மர்மமாக இருந்து வந்தது.

இதனால் அவர் பிடிபட்டால் தான் கோபி கொலைக்கான காரணங்கள் தெரியவரும் என்பதால், அவரை போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று சேலம் டவுன் வருவாய் ஆய்வாளர் சேகர் முன்னிலையில் திருமணிகண்டன் திடீரென சரண் அடைந்தார். பின்னர் அவர் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோபி, திருமணிகண்டன், பொன்னம்மாபேட்டையை சேர்ந்த கட்டிட என்ஜினீயர் வினோத்குமார் (33) ஆகியோர் நண்பர்கள் ஆவர். கோபியின் மனைவியுடன் வினோத்குமாருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த கோபி அவர்களை கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை. இது கோபிக்கு தீராத கோபத்தை ஏற்படுத்தியது. நண்பனாக இருந்து கொண்டே மனைவியுடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்தியதை கோபியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இதனால் வினோத்குமாரை தீர்த்துக்கட்ட வேண்டும் என கோபி, திருமணிகண்டனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து திருமணிகண்டன் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கூலிப்படையினரை ஏற்பாடு செய்து வினோத்குமாரை கொலை செய்ய ரூ.3 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்ற கூலிப்படையினர் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நெத்திமேட்டில் பட்டப்பகலில் வினோத் குமாரை வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கூலிப்படை கும்பல் தலைவன் திடீரென கோபியிடம் இருந்து ரூ.50 லட்சம் வாங்கி கொடுக்குமாறு திருமணிகண்டனிடம் கூறி உள்ளான். இந்த பணத்தை வாங்கி கொடுக்கவில்லை என்றால் வினோத்குமார் கொலை குறித்து போலீசில் தெரிவித்துவிடுவேன். இதனால் நீங்கள் சிறை செல்ல நேரிடும் என மிரட்டி உள்ளான்.

மேலும் அவனுடைய கூட்டாளிகளான கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 4 ரவுடிகளும் திருமணிகண்டனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து திருமணிகண்டன், கோபியிடம் தெரிவித்தபோது, அவர் வினோத்குமார் கொலைக்கு பேசியவாறு ரூ.3 லட்சம் கொடுத்து விட்டேன். இத்தனை ஆண்டுகளுக்கு பின்பு இனிமேல் பணம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். பணம் கொடுக்காததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

பணத்தை கொடுக்காவிட்டால் எப்படியும் கூலிப்படையினர் போலீசில் சிக்க வைத்து விடுவார்கள் என்பதால் கோபியை தீர்த்து கட்ட திருமணிகண்டன் முடிவு செய்தார். இதற்காக சம்பவத்தன்று இரவு அவருடைய தோட்டத்தில் வேலை பார்த்த ஏழுமலை (44) என்பவரை அழைத்துக்கொண்டு கோபி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கோபி கதவை திறந்து வெளியே வந்துள்ளார். பின்னர் கோபியிடம், வினோத்குமார் கொலை தொடர்பாக கூலிப்படையினர் போலீசில் காட்டி கொடுத்து விடுவார்கள். எனவே பிரச்சினை தீர பணம் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் பேசுவதற்காக அவரை காரில் ஏற்றி திருமணிகண்டன் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து பேசும்போது, கோபி பணம் கொடுக்க திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருமணிகண்டன் மற்றும் ஏழுமலை ஆகியோர் கோபியின் கை, காலை கட்டி விட்டு கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி கொன்றனர். பின்னர் கோபியின் உடலை காரில் கொண்டு சென்று முசிறியில் உள்ள காவிரி ஆற்றங் கரையோரம் வீசி விட்டு சென்றனர்.

இவ்வாறு திருமணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து சரண் அடைந்த திருமணிகண்டனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மாலையில் ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். மேலும் வினோத்குமார் மற்றும் கோபி கொலை தொடர்பாக கூலிப்படை தலைவன் உள்பட 5 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 பேரை நண்பரே கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story