எண்ணூர் அரசு பள்ளி விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசியபோது ஒலிபெருக்கி கருவி வெடித்து சிதறியது பிரமுகர்கள்-மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்


எண்ணூர் அரசு பள்ளி விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசியபோது ஒலிபெருக்கி கருவி வெடித்து சிதறியது பிரமுகர்கள்-மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2018 11:51 AM IST (Updated: 6 Sept 2018 11:51 AM IST)
t-max-icont-min-icon

எண்ணூர் அரசு பள்ளியில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசியபோது, ஒலிபெருக்கி கருவி திடீரென வெடித்து சிதறியது.

திருவொற்றியூர், 

தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை எண்ணூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் எஸ். வி.சேகர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு மேடையில் வைத்து பரிசுகளை வழங்கினார்.

ஒலிபெருக்கி கருவி வெடித்தது

பின்னர் நடிகர் எஸ்.வி.சேகர் மைக்கில் மாணவர்களிடையே பேசினார். அப்போது மேடை அருகே இருந்த ஒலிபெருக்கி கருவி (அம்பிளிபயர்) திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்ததோடு மின்சாரமும் தடைபட்டது.

அப்போது மேடையில் இருந்த பிரமுகர்களும், விழாவை பார்த்துக்கொண்டிருந்த மாணவ-மாணவிகளும் அலறியடித்து கொண்டு ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சிறிது நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் மின்சப்ளை வந்தபின் மீண்டும் விழா தொடங்கியது. அப்போது பேச்சை பாதியில் விட்ட நடிகர் எஸ்.வி.சேகர் தொடர்ந்து பேசினார்.

Next Story