திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் வெள்ளி விழா விளையாட்டு வளாகம் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் திறந்து வைத்தார்


திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் வெள்ளி விழா விளையாட்டு வளாகம் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 6 Sept 2018 1:26 PM IST (Updated: 6 Sept 2018 1:26 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு வளாகத்தை ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் திறந்துவைத்தார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு வளாகத்தை ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் திறந்துவைத்தார்.

கல்விப்பணி

திருச்செந்தூர் பகுதி மக்களுக்கு உயர்கல்வி வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார், திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரியை தொடங்கினார். அவருடைய புதல்வர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெண்களுக்கு உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது தாயார் பெயரில் திருச்செந்தூரில் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியை தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து திருச்செந்தூரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, உடற்கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நர்சிங் கல்லூரி, சிவந்தி அகாடமி ஆகியவற்றையும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் தொடங்கி கல்வி பணியாற்றினார்.

விளையாட்டு வளாகம்

விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியை கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தொடங்கி வைத்தார். விழாவில் அப்போதைய நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி தேவி குத்துவிளக்கு ஏற்றினார். இந்த கல்லூரி தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, கல்லூரி வளாகத்தில் வெள்ளி விழா விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த விளையாட்டு வளாகத்தில் ஒரே நேரத்தில் 2 கைப்பந்து போட்டிகளும், 2 கபடி போட்டிகளும் மின்னொளியில் நடத்தும் வகையில், நவீன ஒளி விளக்குகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை ரசிக்கும் வகையில், இருபுறமும் நவீன கேலரிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

திறப்பு விழா

வெள்ளி விழா விளையாட்டு வளாகம் திறப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. விழாவுக்கு ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தலைமை தாங்கி, வெள்ளி விழா விளையாட்டு வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். தொடர்ந்து வெள்ளி விழா விளையாட்டு வளாக கல்வெட்டையும் திறந்து வைத்த அவர், அங்கு நடைபெற்ற கைப்பந்து, கபடி போட்டிகளையும் தொடங்கி வைத்து பார்த்து ரசித்தார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜன், செயலாளர் சுப்பிரமணியன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையாராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Next Story