மாவட்ட செய்திகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு ஏ கிரேடுதுணை வேந்தர் பாஸ்கர் தகவல் + "||" + A grade for Manonmaniam Sundaranar University Vice-Chancellor Bhaskar reported

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு ஏ கிரேடுதுணை வேந்தர் பாஸ்கர் தகவல்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு ஏ கிரேடுதுணை வேந்தர் பாஸ்கர் தகவல்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு ‘ஏ‘ கிரேடு அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது என்று துணை வேந்தர் பாஸ்கர் தெரிவித்தார்.

பேட்டை,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு ‘ஏ‘ கிரேடு அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது என்று துணை வேந்தர் பாஸ்கர் தெரிவித்தார்.

‘ஏ‘ கிரேடு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் நேற்று பல்கலைக்கழகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு நாக் கமிட்டி (தேசிய தரமதிப்பீட்டு குழு) ஏ கிரேடு அந்தஸ்து வழங்கி உள்ளது. இதற்கு முன்பு ‘பி‘ கிரேடில் இருந்து வந்தது. ஆராய்ச்சி, புதிய கல்வி திட்டம் சீரமைப்பு, ஸ்மார்ட் வகுப்புகள், ஒட்டுமொத்த வளர்ச்சியை கொண்டு ‘ஏ‘ கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளது.

நான் பதவியேற்ற போது பல்கலைக்கழகத்தை தமிழக அளவில் முதலிடமாக கொண்டு வருவதற்கு பாடுபடுவேன் என்று கூறினேன். அதன்படி தென்னக ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் நெல்லைக்கு கூடுதல் அந்தஸ்தை பல்கலைக்கழகத்திற்கு நாக் கமிட்டி அளித்துள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகள் 79 மற்றும் மனோ கல்லூரிகள் 10 என மொத்தம் 89 கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். தொலைதூர கல்வியின் மூலமாக 40 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

ஆங்கிலவழி கல்வி

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் ஆங்கில வழியில் நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, சேர்க்கையும் ஆங்கில வழியில் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்களும் ஆங்கில வழியில் தான் பாடங்களை நடத்தி வருகிறார்கள். சில கல்லூரிகளில் தமிழ் மொழியில் வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஆங்கில வழியில் சேர்ந்த மாணவர்கள் தேர்வுகளில் தமிழில் எழுதுகின்றனர். ஆனால் படித்து சான்றிதழ்களை வழங்கும்போது, பட்டத்தை ஆங்கில வழியில் வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆங்கில வழியில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் தேர்வுகளை ஆங்கில வழியில் மட்டுமே எழுத வேண்டும். அவர்களுக்கு மட்டுமே ஆங்கில வழிக்கான பட்டம் வழங்கப்படும். இதுதொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

திறனை வளர்த்து கொள்ள வேண்டும்

கல்லூரி படித்து வரும் மாணவர்கள் சுயமாக ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் அளவிற்காவது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வேலை வாய்ப்பை பெற முடியும். நமது பல்கலைக்கழகம் தமிழுக்கோ தமிழ் மொழிக்கோ எதிரானது அல்ல. நமது மாணவர்கள 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மதிப்பெண் பெறுகிறார்கள். ஆனால் வேலைவாய்ப்பு, நேர்முக தேர்வில் ஆங்கில வழியில் பேசும் திறன் இல்லாததால் வேலை வாய்ப்பை இழக்கிறார்கள். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுதுகிறார்கள். 5 ஆயிரம் மாணவர்கள் தான் தமிழில் தேர்வு எழுதுகிறார்கள். எனவே மாணவர்கள் தங்களது ஆங்கில திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.

29–வது ஆண்டு தொடக்க விழா

கல்லூரிகளில் ஒவ்வொரு பேராசிரியருக்கும் தனித்தனியாக மாணவர்கள் வருகைபதிவேடு வைத்து இருக்க வேண்டும். வருகை பதிவேட்டின் கடைசி பக்கத்தில் பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்த பாடங்கள் குறித்து துறை தலைவரிடம் ஒப்புதல் வழங்க வேண்டும். மாணவர்கள் வருகை பதிவேட்டையும், பருவத்தேர்வு மதிப்பெண்ணையும் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த முடியும். இன்று (வெள்ளிக்கிழமை) பல்கலைக்கழக 29–ம் ஆண்டு தொடக்க விழா காலை 10 மணிக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள வ.உ.சி. அரங்கத்தில் நடக்கிறது. இதில் பல்கலைக்கழகத்தில் முன்பு பணியாற்றிய அனைத்து துணை வேந்தர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, முன்னாள் துணை வேந்தர் வேதகிரி சண்முகம், பதிவாளர் சந்தோஷ் பாபு, துறை தலைவர்கள் கோவிந்தராஜூ, செந்தாமரை கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...