முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க கடனுதவி சமையல் எரிவாயு வினியோகத்தில் 25 சதவீதம் வரை ஒதுக்கீடு


முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க கடனுதவி சமையல் எரிவாயு வினியோகத்தில் 25 சதவீதம் வரை ஒதுக்கீடு
x
தினத்தந்தி 7 Sept 2018 2:00 AM IST (Updated: 6 Sept 2018 8:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுவதாகவும், சமையல் எரிவாயு வினியோக உரிமையில் 25 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக, மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுவதாகவும், சமையல் எரிவாயு வினியோக உரிமையில் 25 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக, மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

தொழில் முனைவோர் கருத்தரங்கு 

தூத்தக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். அந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசியதாவது;–

முன்னாள் படைவீரர்கள் மற்றும் போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களை சுயதொழில் புரிய ஊக்குவிக்கும் வகையில் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. போரில் வீர விருது பெற்றோர், ஊனமுற்றோர், போரில் உயிர்நீத்தோரின் விதவையர்கள், படைப்பணியின் காரணமாக உயிர்நீத்தோரின் விதவையர்கள் மற்றும் 20 சதவீதத்திற்கு மேல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு எண்ணெய் நிறுவன வினியோக உரிமையில் 8 சதவீதம், சமையல் எரிவாயு வினியோக உரிமையில் 18 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடனுதவி 

விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டு தொழில்கள் செய்திட நபார்டு வங்கியின் மூலம் 8.5 சதவீதம் முதல் 10.25 சதவீதம் வரை வட்டி விகிதத்தில் மூலதனத்தில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கடனுதவி பெற்று சுயதொழில் புரியலாம். காதி கிராம ஆணையம் மூலம் பாரத பிரதமரின் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் மூலிகை மருந்துவ தொழில், தோட்டக்கலை, வாசனைப்பூக்கள் உற்பத்தி, ஏற்றுமதி, கால்நடை பராமரிப்பு, முகப்புரிமை, பொக்லைன் எந்திரங்கள் நிறுவுதல் ஆகிய பல்வேறு தொழில்களுக்கு இந்த திட்டத்தின் மூலமாக 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை உற்பத்தி தொழில்களுக்கும், ரூ.10 லட்சம் வரை வியாபார சேவைகளுக்கும் கடன் பெறலாம்.

முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் புரிய பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு முன்னாள் படைவீரர்கள் சிறந்த தொழில் முனைவோராக உருவாக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

யார்–யார்? 

இந்த கூட்டத்தில், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் நாகராஜன், முன்னோடி வங்கி மேலாளர் விஜயபாண்டியன், நபார்டு வங்கி மேலாளர் விஜயகுமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் மற்றும் மாவட்ட தொழில் முகமை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story