ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருந்தால் அரிசி வேண்டாம் என்று மக்களும் விட்டுக்கொடுக்கலாம்
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காத பொதுமக்களும் அரிசி வேண்டாம் என்று விட்டுக் கொடுக்கலாம் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
தேனி,
தேனி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால், தங்களின் ரேஷன் கார்டை அரிசி தேவையில்லை என்றோ, அனைத்துப் பொருட்களும் தேவையில்லை என்றோ விட்டுக் கொடுத்து ரேஷன் கார்டை மாற்றிக் கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவுரை வழங்கி உள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பல்வேறு ஆய்வுக் கூட்டங்களின் போது அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த வேண்டுகோளை அவர் வைத்து வந்தார். அதன்படி சுமார் 160 பேர், ரேஷன் பொருட்கள் வேண்டாம் என்று விட்டுக் கொடுத்துள்ளனர்.
தற்போது பொதுமக்களிலும் பொருட்கள் வாங்காதவர்கள் விட்டுக் கொடுக்கலாம் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு பொது வினியோகத் திட்டம் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு அளிப்பதில் சிறப்பான கருவியாக செயல்பட்டு வருகிறது. 1-6-2011 முதல் வேறு எங்கும் இல்லாத வகையில், மக்களுக்கு வாழ்க்கையின் அடிப்படை தேவையான உணவு கிடைக்கச் செய்வதற்காக ரேஷன் கார்டுதாரர்களுக்கு விலையில்லா அரிசி பெற்றுக் கொள்ள வழி வகை செய்துள்ளது.
விலையில்லாத அரிசியை வாங்காத குடும்பத்தினர் விட்டுக்கொடுக்கும் வசதியையும் குடிமைப்பொருள் வழங்கல் துறை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மாற்றுவதன் மூலம் அரசுக்கான உணவு மானியம் செலவினம் குறைவதுடன், இந்த அரிசி தவறாக பயன்படுத்தப்படுவதும் தவிர்க்கப்படும். எனவே, ரேஷன் கார்டு மூலம் அரிசி தேவைப்படாத குடும்பத்தினர் தங்களது ரேஷன் கார்டை சர்க்கரை மட்டும் பெறுவதற்கான கார்டாக மாற்றி கூடுதலாக 3 கிலோ சர்க்கரை பெற்றுக் கொள்ளலாம். அல்லது தங்களின் ரேஷன் கார்டை எப்பொருளும் வேண்டாத கார்டாக மாற்றிக் கொள்ளலாம்.
அதேபோல், அவசிய பணி நிமித்தமாக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் பொருட்கள் குறிப்பிட்ட மாதங்களுக்கு விட்டுக் கொடுத்தல் முறை மூலம் TN-E-P-DS என்ற கைப்பேசி செயலியை பயன்படுத்தி விட்டுக் கொடுக்கலாம். மேலும், பொதுமக்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் தங்களது ரேஷன் கார்டில் தாங்களாகவே இத்தகைய மாற்றங்களை செய்து கொள்ளலாம். தங்களது தாலுகாவில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தையோ, 1967 அல்லது 180-425-5901 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை விற்பனையாளரிடம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ரேஷன் கடையில் இருந்து தாங்கள் வாங்காத பொருட்களுக்கு வாங்கியதாக குறுஞ்செய்தி வந்தால் அந்த குறுஞ்செய்தியிலேயே உள்ள 99809-04040 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். வெளிப்படையான பொதுவினியோகத் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story