குற்ற செயல்களை தடுக்க 16 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள்


குற்ற செயல்களை தடுக்க 16 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள்
x
தினத்தந்தி 7 Sept 2018 3:30 AM IST (Updated: 7 Sept 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

குற்ற சம்பவங்களை தடுக்க திண்டுக்கல் நகர் பகுதியில் 16 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கூறினார்.

திண்டுக்கல்,


கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவோரை பிடிப்பதற்கு போலீசாருக்கு பேருதவியாக இருப்பது கண்காணிப்பு கேமராக்கள் தான். தற்போது நகைப்பறிப்பு, திருட்டு போன்ற சம்பவங்கள் நடந்தால், அந்த பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்று தான் போலீசார் பார்ப்பார்கள்.

அவ்வாறு கேமரா இருந்தால் அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடத்துவார்கள். இதனால் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் தான் போலீசாருக்கு துருப்பு சீட்டாக உள்ளது. இதற்காக போலீஸ் துறை சார்பில் திண்டுக்கல் நகர் பகுதியில் சுமார் 100 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து பல்வேறு சம்பவங்களில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில் ஒரு சில நேரங்களில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் தெளிவாக இல்லாமல் போனதால், குற்றவாளிகளை கைது செய்வது தாமதமானது. கடந்த சில மாதங்களாக திண்டுக்கல் நகர் பகுதியில் கொலை, கொள்ளை, நகைப்பறிப்பு என தொடர்ந்து ஏதாவது சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கிறது. இந்தநிலையில் போலீஸ் துறை சார்பில் திண்டுக்கல் நகர் பகுதியில் மேலும் சில கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தற்போது சாலை சந்திப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் உள்பட 16 இடங்களில், அதிநவீன வசதி கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கேமராக்கள் ஒரு வாகனத்தின் பதிவு எண் மற்றும் வாகன ஓட்டியின் முகம் ஆகியவற்றை மிகவும் துல்லியமாக பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மற்ற கேமராக்களை பொறுத்தவரை அருகில் உள்ளவற்றை மட்டுமே ஓரளவு துல்லியமாக படம் பிடிக்க முடியும். ஆனால் தற்போது பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள், தூரத்தில் வரும் வாகனத்தை கூட துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டவை ஆகும். இதன் மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய முடியும். இதனால் திருட்டு, நகைப்பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.

இந்த தகவலை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கூறினார். 

Next Story