மகன்கள் கவனிக்காததால் விரக்தியில் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பெண் பணியாளர் தீக்குளிப்பு


மகன்கள் கவனிக்காததால் விரக்தியில் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பெண் பணியாளர் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 6 Sep 2018 10:45 PM GMT (Updated: 6 Sep 2018 7:35 PM GMT)

தண்டையார்பேட்டை தொற்று நோய் அரசு ஆஸ்பத்திரி துப்புரவு பெண் பணியாளர், தன்னை மகன்கள் கவனிக்காத விரக்தியில் தீக்குளித்தார். படுகாயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை அப்பாசாமி கார்டனை சேர்ந்தவர் லட்சுமி(வயது 57). இவர், தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய கணவர் சண்முகம் இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 15 நாட்களாக லட்சுமி, உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு வரவில்லை. நேற்று வேலைக்கு வந்த லட்சுமி, சக துப்புரவு பணியாளர்களிடம், “எனக்கு 2 மகன்கள் இருந்தும் எந்த பயனும் இல்லை. என்னை அவர்கள் சரியாக கவனிப்பதே இல்லை” என்று வேதனைப்பட்டார்.

இந்தநிலையில் சிறிது நேரத்தில் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே லட்சுமி, திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார்.

இதை கண்ட அங்கிருந்த சிலர், லட்சுமி உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story