15 இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்


15 இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 7 Sept 2018 3:30 AM IST (Updated: 7 Sept 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் கொடுத்த புகாரின்பேரில் 15 இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் படி திடீர் ஆய்வு நடத்தினர்.

இதையடுத்து மாலை 6 மணியளவில் மீண்டும் 2-வது முறையாக நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அப்போது நீதிபதிகள் கோவிலில் 3 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத தங்கத்தேர் குறித்தும், கோவிலில் பக்தர்கள் அனைவரையும் சரிசமமாக நடத்துகின்றனரா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். பின்னர் நீதிபதிகள் பக்தர்களிடம் குறைகள் கேட்டறிந்தனர்.

அப்போது, இடைத்தரகர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்வதற்காக பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு குறுக்கு வழியில் தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரனிடம், நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது இணை ஆணையர், ஏற்கனவே இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் 15 இடைத்தரகர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். பின்னர் மாவட்ட அமர்வு நீதிபதி மகிழேந்தி, ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டு உள்ள 15 இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் தங்கத்தேர் குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு அறிக்கை கொடுத்து விரைவில் தங்கத்தேர் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி மகிழேந்தி கூறினார்.

நீதிபதிகள் ஆய்வினால் கோவில் அலுவலர்கள் கலக்கத்தில் உள்ளனர். மேலும் இதுபோன்று மாவட்ட நீதிபதி அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story