நகை திருடியதாக குற்றம் சுமத்தியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கலவை அருகே நகை திருடியதாக குற்றம் சுமத்தியதால் வேதனை அடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ராணிப்பேட்டை,
கலவை அருகே உள்ள மேல்நேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 25). இவர் ராணிப்பேட்டை நவல்பூரில் உள்ள பேக்கரியில் வேலை பார்க்கிறார். இவருக்கும் இவரது உறவினர்கள் மகள் அஸ்வினிக்கும் (20) கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது வீட்டிற்கு அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைபார்த்து வரும் நர்சு வசிக்கிறார்.
அடிக்கடி அவரது வீட்டிற்கு அஸ்வினி சென்று வருவது வழக்கமாம். இந்த நிலையில் நர்சு வீட்டில் இருந்த 2½ பவுன் நகையை காணவில்லை. இது குறித்து அஸ்வினி மீது குற்றம்சுமத்திய அவர் “நகையை திருடி இருந்தால் கொடுத்துவிடு, இல்லையேல் போலீசில் புகார் கூறி விடுவேன்” என மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த அஸ்வினி கடந்த 3-ந் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் கலவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வினி இறந்து விட்டார்.
இது தொடர்பாக அவரது தாயார் செண்பகவல்லி, கலவை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 11 மாதத்தில் அஸ்வினி தற்கொலை செய்திருப்பதால் அது குறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story