வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: மருத்துவமனையில் பெண்ணால் மடக்கிப்பிடிக்கப்பட்ட வாலிபர் சிறையில் அடைப்பு


வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: மருத்துவமனையில் பெண்ணால் மடக்கிப்பிடிக்கப்பட்ட வாலிபர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 6 Sep 2018 10:45 PM GMT (Updated: 6 Sep 2018 8:32 PM GMT)

கத்தார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது தொடர்பாக தேடப்பட்டு வந்த வாலிபர் ஒருவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண்ணால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது27). இவரிடம், கொரடாச்சேரி அருகே உள்ள அத்திக்கடையை சேர்ந்த முகமதுதாரிக் (24) என்பவர், கத்தார் நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 ஆயிரம் வாங்கி உள்ளார். இதேபோல் நீடாமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன், கர்ணன், குமரேசன், ஒக்கநாடு கீழையூரை சேர்ந்த சின்னதுரை உள்பட 6 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி முகமதுதாரிக் பணம் வாங்கி உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று முகமதுதாரிக், அய்யப்பன் உள்ளிட்டோரிடம் விமான டிக்கெட் மற்றும் விசாவை வழங்கி சென்னைக்கு அழைத்து சென்றார். சென்னையில் உள்ள ஒரு விடுதியில் அய்யப்பன் உள்ளிட்டோரை 3 நாட்கள் தங்க வைத்துவிட்டு முகமதுதாரிக் தலைமறைவாகி விட்டார். அதன் பின்னரே அய்யப்பன் உள்ளிட்டோருக்கு முகமதுதாரிக் வழங்கிய விமான டிக்கெட் மற்றும் விசா போலியானது என்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட அய்யப்பன் உள்ளிட்டோர் முகமதுதாரிக்கை கடந்த 8 மாதங்களாக பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அய்யப்பனின் மனைவி கவுசல்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த முகமதுதாரிக்கை பார்த்து அதிர்ச்சி அடைந்த கவுசல்யா, அவரை பிடிக்க முயன்றார். ஆனால் முகமதுதாரிக், மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து கவுசல்யா முகமதுதாரிக்கை விரட்டி சென்று மடக்கிப்பிடித்து, திருவாரூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தார்.

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் ஒருவர், வாலிபரை விரட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிடிபட்ட முகமதுதாரிக், கொரடாச்சேரி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே முகமதுதாரிக் மீது அய்யப்பன் கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் முகமதுதாரிக்கிடம் கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேதவள்ளி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முகமதுதாரிக், அய்யப்பன் உள்ளிட்டோரிடம் கத்தார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் முகமதுதாரிக்கை, போலீசார் திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story