மணல் கடத்தி வந்த 26 லாரிகள் பறிமுதல்; 12 பேர் கைது
நாகையில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி சென்ற 12 பேரை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 26 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வெங்கடாம்பேட்டை மற்றும் பஸ் நிலையம் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 26 லாரிகளை போலீசார் மடக்கினர். போலீசாரை பார்த்தவுடன் லாரிகளை நடுவழியிலேயே நிறுத்திவிட்டு, அதன் டிரைவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்தனர். இதில் 12 பேரை மட்டும் போலீசார் பிடித்தனர். மற்ற 14 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், காஞ்சீபுரம் மாவட்டம் படாளம் ஜெயா மகன் ரவி (வயது 21), குன்னவாக்கம் ஏழுமலை மகன் ஜெயசங்கர் (29), ஈசூர் முனுசாமி மகன் ஏழுமலை(38), மொர்ப்பராஜபுரம் கங்கன் மகன் பெருமாள் (38), பழையனூர் முருகேசன் மகன் ரத்தினகுமார் (38), செந்தில்குமார் (38), செங்கல்பட்டு தேவராஜ் மகன் கன்னியப்பன் (39), அஞ்சூர் வாசு மகன் சுரேஷ் (21), மதுராந்தகம் ஆத்தூரை சேர்ந்த பெருமாள் மகன் ஜெயக்குமார் (36), விழுப்புரம் மாவட்டம் சித்தாமூர் அன்பழகன் மகன் பிரகாஷ் (30), சாலைமடம் கண்ணன் மகன் சக்திவேல் (32), விளங்கப்பாடி ஏழுமலை மகன் கோபால் (38) ஆகியோர் என்பதும், இவர்கள் அனைவரும் நாகை மாவட்டம் வேட்டாங்குடி பகுதியில் இருந்து மணலை கடத்திக் கொண்டு சென்னை, காஞ்சீபுரம் பகுதிக்கு சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் 12 பேரையும் கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 26 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story