பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
வெலிங்டன் ஏரி பராமரிப்பு பணி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
திட்டக்குடி,
வெள்ளாறு வடிநில திட்டத்தின் கீழ் வெலிங்டன் ஏரியை முறையாக சீரமைக்க வேண்டும். 2014-18-ம் ஆண்டுகளில் கடலூர் மாவட்ட அளவில் பொதுப்பணித்துறை மூலம் நடந்த அனைத்து ஏரி பராமரிப்பு பணிகள் குறித்து சி.பி.ஐ. மூலம் விசாரணை நடத்த வேண்டும்.
வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் அனைத்து வாய்க்கால்களையும் தூர்வாருதல் மற்றும் பராமரித்தல் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.அனைத்து குடிமராமத்து பணிகளையும் விவசாய சங்கங்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். வெலிங்டன் ஏரிக்கரையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட விரிசலை உடனே சரி செய்ய வேண்டும்.
பாசன வாய்க்கால்களில் உள்ள கான்கிரீட் சிமெண்டு தளங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தினர் கீழ்செருவாய் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தயா.பேரின்பம் தலைமை தாங்கினார். செயலாளர் பரமசிவம், பொருளாளர் பாண்டுரங்கன், நிர்வாகக்குழு உறுப்பினர் பழனிசாமி, உதயக்குமார், லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதுபற்றி தகவல் அறிந்த பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாஸ்கரன், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதற்கிடையே பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதாக சிறு குறு விவசாயிகள் 30 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story