த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு


த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 7 Sept 2018 3:30 AM IST (Updated: 7 Sept 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

திருமண நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர்களை பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கோவை, 


இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, இஸ்மாயில், கோவையை சேர்ந்த ஆசிக், பைசல் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீது சட்டவிரோத தடுப்பு சட்டம் (உபா) உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களுடன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிக்கின் மனைவி பவுசியா, கைக்குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் ஜெய்னுலாப்தீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 1-ந் தேதி கோவையில் திருமண நிகழ்ச்சிக்காக வந்த வாலிபர்களை கோவை காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் இந்து இயக்க தலைவர்களை கொல்ல வந்ததாக கூறி, அவர்கள் மீது உபா (யு.ஏ.பி.ஏ.) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைதானவர்களின் பெற்றோர் வேண்டுகோளுக்கு இணங்க கோவை த.மு.மு.க. வக்கீல்கள் வாலிபர்களை சிறையில் சந்தித்து விவரங்களை கேட்டோம். அப்போது பொய் வழக்கில் தங்களை சிக்க வைத்து விட்டதாகவும், வழக்குகளை ஏற்றுக்கொள்ளுமாறு போலீசார் மிரட்டி கையெழுத்து வாங்கி உள்ளதாகவும் கூறினர். இந்த வழக்கில் யாருடைய அழுத்தத்துக்கோ பணிந்து கோவை காவல்துறை செயல்படுகிறது. மேலும் கைதான வாலிபர்கள் மீது தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

முஸ்லிம் வாலிபர்கள் கைது செய்யப்பட்டால் தீவிரவாதிகள் மீது போடப்படும் சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் (யு.ஏ.பி.ஏ.) வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்து அமைப்பினர் சட்டவிரோத செயல்களில் கைது செய்யப்பட்டால் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவில் மட்டும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. சசிகுமார் கொலை செய்யப்பட்டபோது பயங்கர கலவரம் நடைபெற்றது. போலீஸ் ஜீப் எரிக்கப்பட்டதுடன், கடைகளும் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதுதொடர்பாக 850 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சாதாரண வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. எனவே வழக்குப்பதிவு செய்வதில் பாரபட்சம் காண்பிக்கப்படுகிறது. எனவே வாலிபர்கள் மீது போடப்பட்ட யு.ஏ.பி.ஏ. சட்டப்பிரிவுகளை நீக்க வேண்டும். நேர்மையான அதிகாரிகளை வைத்து உரிய விசாரணை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிக்கின் மனைவி பவுசியா கூறும்போது, ‘என்னுடைய கணவரை போலீசார் வேண்டுமென்றே கைது செய்து பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைக்குழந்தையுடன் நான் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். கைதானவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்து உள்ளதாகவும் பொய்யான தடயங்களை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். சதி திட்டம் எதனையும் அவர்கள் செய்யவில்லை. என்னுடைய கணவர் ஆசிக் உள்ளிட்ட அனைவர் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்று விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகளுடன் நான் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை ஏற்படும்’ என்று தெரிவித்தார். இதனைதொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் லட்சுமியை சந்தித்து அவர்கள் மனு கொடுத்தனர். த.மு.மு.க. மாவட்ட தலைவர் அகமது கபீர், ஜெம்பாபு, ஜாபர் சாதிக் உள்பட பலர் உடன் சென்று இருந்தனர். 

Next Story