கார்கள்-மோட்டார்சைக்கிள் மோதல்; என்ஜினீயர் படுகாயம்


கார்கள்-மோட்டார்சைக்கிள் மோதல்; என்ஜினீயர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Sept 2018 4:22 AM IST (Updated: 7 Sept 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே 2 கார்கள், மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார்சைக்கிள் எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த என்ஜினீயர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பல்லடம், 


பல்லடம் அருகே உள்ள காடாம்பாடி மாருதி நகரை சேர்ந்தவர் சுராஜ் (வயது 40). இவர் கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று தாராபுரத்தில் உள்ள ஒரு கம்பெனிக்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அவர் கோவை-திருச்சி மெயின்ரோட்டில் பல்லடம் அருகே உள்ள சாமிகவுண்டம்பாளையம் பிரிவு அருகே சென்று போது முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு கார் அந்த பகுதியில் இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு திரும்பியது. இதனால் காரின் பின்னால் சென்ற சுராஜ் அந்த கார் மீது மோதாமல் இருக்க தனது மோட்டார்சைக்கிளை திருப்பினார். அப்போது எதிரே வந்த மற்றொரு கார் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அத்துடன் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு திரும்ப முயன்ற கார் மீதும் மோட்டார்சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. அத்துடன் சுராஜின் கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் 2 கார்களும் சேதம் அடைந்தன. இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு பல்லடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் படுகாயம் அடைந்த சுராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இது தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story