முக்கிய வழக்குகளில் தகவலை கசியவிடுவதா? போலீசாருக்கு, ஐகோர்ட்டு கண்டனம்


முக்கிய வழக்குகளில் தகவலை கசியவிடுவதா? போலீசாருக்கு, ஐகோர்ட்டு கண்டனம்
x
தினத்தந்தி 7 Sept 2018 5:14 AM IST (Updated: 7 Sept 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

முக்கிய வழக்குகளில் தகவலை கசியவிட்ட போலீசாருக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

மும்பை,

சமூக சீர்திருத்தவாதி நரேந்திர தபோல்கர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரே ஆகியோரின் கொலை வழக்குகளை, சி.பி.ஐ. மற்றும் சி.ஐ.டி.போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இவர்களின் விசாரணையை ஐகோர்ட்டு மேற்பார்வை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோரின் குடும்பத்தினர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இதுகுறித்த விசாரணை நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் கொலபாவாலா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணை யின் போது சி.பி.ஐ. மற்றும் சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், தினமும் 2 துறைகள் நடத்தும் விசாரணை தகவல்கள் ஊடகங்களில் கசிவதாக கூறினர். மேலும் சமீபத்தில் மாவோயிஸ்டு ஆதரவாளர் கள் குறித்த தகவலை ஐ.பி.எஸ். அதிகாரி பரம்பீர் சிங் ஊடகங்கள் முன் பகிரங்கப் படுத்தியதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

பத்திரிகையாளர் கூட்டத்தில் பரம்பீர் சிங், கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு ஆதரவா ளர்கள் பரிமாறிக்கொண்ட முக்கிய ஆதாரமான கடிதத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் படித்து காட்டி இருக்கிறார்.

போலீசாரின் இந்த அதீத உற்சாகம் ஆபத்தை ஏற்படுத்த கூடியதாகும். விசாரணையின் முக்கிய கட்டத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், போலீசார் அவசரப்பட்டு பத்திரிகை யாளர்கள் முன் தடயத்தை வெளியிடுவது சரியான வழிமுறையன்று. இது அவர்களின் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது.

இது குற்றவாளிகளை விழிப்படைய செய்யும் நடவடிக்கையாகும். இதுபோன்ற சுய பாராட்டு மற்றும் சுய விளம்பரம் போலீசாருக்கு நல்லதல்ல.

இதேபோல் தபோல்கர் கொலை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளிலும் தினம் தினம் ஊடகங்களுக்கு தகவல் கசிந்து வருகிறது. யாராவது வேண்டுமென்றே தகவல்களை ஊடகங்களுக்கு கொடுத்து வருகிறார்களா?

குற்றவாளிகளுக்கு எதிராக ஊடகங்களுக்கு தகவல் கொடுக்கும் போலீசார் கோர்ட்டில் தங்கள் சாட்சியை நிரூபிப்பது எவ்வளவு கடினம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர். 

Next Story