வாகனங்களின் முழு விவரங்களை பதிவேற்றம் செய்யாத நிலை


வாகனங்களின் முழு விவரங்களை பதிவேற்றம் செய்யாத நிலை
x
தினத்தந்தி 7 Sept 2018 5:18 AM IST (Updated: 7 Sept 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விவரங்களை வட்டார போக்குவரத்து துறையினர் முழுமையாக பதிவேற்றம் செய்யாததால் அதற்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள செயலியால் பலன் கிடைக்காத நிலை உள்ளது.

விருதுநகர், 


மத்திய அரசு தேசிய தகவல் மையம் மூலம் எம்.பரிவாகனம் என்ற செயலியை அறிமுகம் செய்து உள்ளது. இந்த செயலி மூலம் போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் முழு விவரங்களை அறிய வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் தகுதிச் சான்றிதழ் முடியும் காலம் உள்ளிட்ட அந்த வாகனத்தின் பல்வேறு விவரங்களை இந்த செயலி மூலம் அறிய முடியும். இதனால் விபத்தில் சிக்கிய வாகனங்கள் பல்வேறு குற்றவியல் சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்கள் மற்றும் இதர பிரச்சினைக்குரிய வாகனங்கள் தொடர்பான விவரங்களை அறிய முடியும்.

இந்த செயலி மூலம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் முழு விவரங்களை அறிய வட்டார போக்குவரத்து துறையினர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் முழு விவரங்களையும் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்து இருக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் வட்டார போக்குவரத்து துறையினர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்யாத நிலை உள்ளது.

பெரும்பாலான போக்குவரத்து கழக பஸ்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. சமூக ஆர்வலர் ஒருவர் 10 போக்குவரத்து கழக பஸ்களின் விவரங்களை செயலி மூலம் அறிய முற்பட்ட போது 4 பஸ்களின் விவரங்களை மட்டுமே அறிய முடிந்துள்ளது. 6 பஸ்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படாததால் அதனை அறிய முடியவில்லை. விருதுநகர் கோட்டத்தில் உள்ள ஒரு போக்குவரத்து கழக டவுன் பஸ்சுக்கு டி.என்.67- என்.409 மற்றும் 419 என இரு எண்கள் உள்ளன. இந்த இரு பதிவு எண்களை கொண்டும் அந்த பஸ்சை பற்றிய முழு விவரங்களை செயலி மூலம் கண்டறியமுடியவில்லை.

இது பற்றி விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, சம்பந்தப்பட்ட பஸ்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கலாம் என்றும், அது பற்றி விவரங்களை தந்தால் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவித்தார். பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் முழு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டிய வட்டார போக்குவரத்து துறையினர் அதற்கான நடவடிக்கையை எடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை.

இந்த குறைபாடு பற்றி அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றால் விடுபட்ட வாகனங்களின் பதிவெண்களை தந்தால் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறுவதும் ஏற்புடையது அல்ல. விடுபட்ட வாகனங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அதனை செய்யாமல் தகவல் தந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது வேதனை அளிக்கும் விஷயம் ஆகும்.

தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடிப்படையில் தேசிய தகவல் மையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ள போது அதனை மக்கள் பயன்படுத்தும் வகையில் தேவையான விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டியது அரசு துறையின் கடமையாகும். இதனை வட்டார போக்குவரத்து துறை செய்ய தவறி உள்ளது ஏற்புடையது அல்ல. எனவே மாவட்ட போக்குவரத்து அதிகாரியான கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதன்மூலமே விபத்து நேரங்களில் வாகனங்களின் விவரங்களை கண்டறிய உடனடி வாய்ப்பு ஏற்படும். 

Next Story